விமர்சனம்

மிக மிக அவசரம் – திரைப்பட விமர்சனம்

பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம்.

மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது.

தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதிகாரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண் காவலரைப் பழிவாங்கும் விதமாக அதிகாரி செய்யும் செயலும் அதனால் என்ன நடக்கிறது? என்கிற சின்ன கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெண் காவலராக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா மிக இயல்பாக நடித்து வேடத்துக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். குடும்பச் சிக்கல், பணியிடச் சிக்கல் ஆகியனவற்றில் பெண் காவலர்களின் நிலையை அந்தப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.

எல்லாச் சிக்கல்களையும் தாண்டி கடமை உணர்வோடு மக்களை விரட்ட குரல் உயர்த்தும் நேரத்தில் சட்டென அவர் காட்டும் வேறுபாடு பாராட்டத்தக்கது.

காவல் ஆய்வாளராக முத்துராமன், தனக்குக் கீழே உள்ள காவலரைக் குரூரமாக வதைக்க எண்ணும் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். 

சக காவலர்களாக நடித்திருக்கும் ராமதாஸ், வீ.கே.சுந்தர் ஆகியோர் தங்கள் நடிப்பால் பரிதாபத்துக்குரிய காவலர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

ஸ்ரீபிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ஹரீஷ்குமார், சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்கவைக்கிறார்.

விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து எல்லோரையும் கவனிக்க வைத்த அரவிந்தன், இந்தப்படத்திலும் ஈழத்தமிழ் ஏதிலியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மட்டுமின்றி அவருடைய பார்வையும் நம்மைச் சுடுகிறது.

காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் சீமான்,அதற்குரிய மிடுக்கோடு இருக்கிறார். காவல்துறையில் நிரம்பி வழியும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கி அவர் பேசும்போது காதுகளுக்கு இதமாக இருக்கிறது.

பாலபரணியின் ஒளிப்பதிவில் பவானி, மேட்டூர் ஆகிய பகுதிகள் புதிதாகத் தெரிகின்றன.

இஷான் தேவ் இசை பொருத்தம். பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒரு வரிக்கதையை எடுத்துக் கொண்டு அதற்குள் தமிழ்த்தேசிய அரசியல் விதைகளைத் தூவியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. 

இரத்த சொந்தங்களான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசுகள், இங்கே வாழும் ஈழத்தமிழர்களை குற்றவாளியாகப் பார்க்கும்  பார்வையை எளிய மனிதர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
  
சிங்களப் பிரமுகர் வரவிருக்கிற பாலத்தில், தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் பெயர் தாங்கிய வாகனம் பழுதாகி நிற்கிறது. அந்நேரம்  ஸ்ரீபிரியங்கா, தன் சொந்தச் சிக்கலுக்காக அழைக்கிறார் என்று நினைத்து ஆய்வாளர் கைபேசியை எடுக்காமல் இருக்கும் காட்சிகள் விறுவிறுப்பு.

திரைக்கதையாக்கத்தில் இருக்கும் குறைகளை சொல்லியிருக்கும் நல்ல கருத்துகள் மிஞ்சிவிடுகின்றன.

Related Posts