களமிறங்கிய விக்ரம் – முடிவுக்கு வருகிறது துருவ்விக்ரம் சிக்கல்
நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தின் கதையினை கரண் அரவிந்த் குமாருடன் இணைந்து ஷபி எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்கி,படத்தொகுப்பாளராக ஜெயசூர்யா, சண்டைக்காட்சிகளை விக்ரம் மோர் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.
இப்படத்தை தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.போனமாதம் இப்படத்தின் தொடக்கவிழா மற்றும் அதைத்தொடர்ந்து படப்பிடிப்பும் நடந்துவருகிறது.
இதற்கு முன்பே,இன்னொரு தெலுங்கு நிறுவனத்தின் தயாரிப்பில் ரமேஷ்வர்மா என்பவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க துருவ்விக்ரம் ஒப்புக்கொண்டிருந்தாராம்.
இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற கில் எனும் திரைப்படத்தை மொழியாக்கம் செய்வது என்று ஒப்பந்தம்.
அந்தக்கதையின் உரிமையை வாங்குங்கள் நான் நடிக்கிறேன் என்று துருவ்விக்ரம் சொன்னதால்தான் அந்த உரிமையை சிலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
அதை வாங்கியபின் துருவ்விக்ரமுக்கும் பெரும் தொகை முன்பணமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அதன்பின்,அப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றிய கொரியாவைச் சேர்ந்த சண்டைப்பயிற்சி இயக்குநரை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.அதையும் பல இலட்சங்கள் செலவிட்டு செய்திருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற அனிமல் படத்தின் இசையமைப்பாளர்தான் வேண்டும் என்று துருவ்விக்ரம் சொல்ல அவருக்கும் பல இலட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அதோடு படப்பிடிப்புக்காக பெரிய அளவில் தொடர்வண்டி,தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட அரங்குகளை சில கோடி செலவில் அமைத்திருக்கிறார்கள்.
இவை எல்லாம் செய்த பின்பும் அப்படத்தில் நடிக்க தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் துருவ்விக்ரம்.பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வராமல் தவிர்த்திருக்கிறார்.ஒருகட்டத்தில் இந்தப்படத்தில் என்னால் நடிக்கவியலாது,வேறு கதை சொல்லுங்கள் பிடித்திருந்தால் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் துருவ்விக்ரம் இறங்கிவரவில்லை.அதோடு அவருக்கு இப்போது மேலாளராக இருக்கும் பிரசாந்த் என்பவர் ரொம்ப அதிகமாகப் பேசினார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் வெகுண்ட தயாரிப்பு நிறுவனம்,இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து,துருவ்விக்ரம் சொன்னதைத்தான் நாங்கள் செய்தோம் எல்லாம் செய்த பிறகு நடிக்க முடியாதென்கிறார்.இதற்காக இதுவரை சுமார் இருபது கோடி செலவு செய்துவிட்டோம்.அவர் இந்தப்படத்தில் நடிக்கவேண்டும் அல்லது நட்ட ஈடாக இருபது கோடி தரவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பொதுவெளியில் நியாயம் கேட்கத் திட்டமிட்டிருந்தார்கள்.கடைசிநேரத்தில் அந்தச் சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
செய்தியறிந்த நடிகர் விக்ரம் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு செய்தியாளர் சந்திப்பை நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார்.அதன்பின்,மகனிடமும் அவரது மேலாளரிடமும் பேசியிருக்கிறார்.மேலாளர் இதைக் கையாண்ட விதமே சிக்கல் பெரிதாகக் காரணமென்பதை உணர்ந்து அவரிடம் கடுமையாகப் பேசிவிட்டார் என்கிறார்கள்.அதன்பின்,மகனிடம்,இந்தப்படத்தில் நீ நடிப்பதுதான் முறை என்று அறிவுறுத்தியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதனால்,இந்தச்சிக்கல் முடிவுக்கு வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி நடப்பது நல்லதுதான்.










