கடுப்பில் லைகா கவலையில் ஷங்கர் – தொடரும் இந்தியன் 2 சிக்கல்
கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.இதனால், கமல் ஒரு புதியபடத்தில் (விக்ரம்) நடிக்கப் போய்விட்டார்.இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்கப்போனார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தாராம்.
அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தனராம். அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே ராம்சரண் படம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தன்னிடம் ஒப்புக்கொண்டதற்கு மாறாக இந்தப்படம் தொடங்கப்பட்டதால் சுபாஷ்கரன் கோபமாகிவிட்டாராம். லைகா நிறுவனத்தினர் ஷங்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, பூஜை மட்டும்தான் போடுகிறோம் படப்பிடிப்பு தாமதமாகும் என்று சமாதானம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
அதோடு, சித்தார்த், பிரியாபவானிசங்கர் ஆகியோர் நடிக்க வேண்டிய காட்சிகள் உட்பட பல காட்சிகளைப் படமாக்குவதற்கேற்ப ஷங்கர் குழு தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
ஆனால், ஷங்கர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்கிற கோபத்தில் லைகா நிறுவனம் படப்பிடிப்பை நடத்தத் தேவையானவற்றைச் செய்துகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் இயக்குநர் ஷ்ங்கர் கவலையில் இருக்கிறாராம்.











