விஷால் 34 படத்தின் பெயர் இதுதான்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானிசங்கர், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு சுகுமார்.
இப்படத்தை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
2023 ஏப்ரல் 23 ஆம் தேதி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஜூலை 15 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.தொடங்கும்போது தற்காலிகமாக, விஷால் 34 என்றழைக்கப்பட்டது. இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
இப்படத்துக்கு ரத்தினம் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
ரத்தினம் என்பது தங்கம் வைரம் போல் விலைமதிப்புள்ள உலோகம் என்பது மட்டுமின்றி பலருக்குப் பெயராகவும் இருக்கும் ஒரு சொல்.
விஷால் 34 படத்திலும்,நாயகன் விஷால் குணநலனில் உயர்ந்தவர் என்பதோடு அவருடைய கதாபாத்திரத்தின் பெயராகவும் இருக்கும். எனவே இருபொருள்படும் இப்பெயரை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே ஹரியும் விஷாலும் இணைந்து பணியாற்றிய தாமிரபரணி, பூஜை ஆகிய இருபடங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்படங்கள் இன்றளவும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் படங்களாக இருக்கின்றன.அந்த வரிசையில் இந்தப்படமும் சேரும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
அதோடு, எந்தவொரு கதாநாயகனாக இருந்தாலும் அவருடைய முந்தையபடத்தின் முடிவே அடுத்த படத்தில் எதிரொலிக்கும் என்பார்கள்.
அந்த வகையில், விஷாலின் முந்தைய படமான மார்க் ஆண்டனி வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. அதனால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப்படத்தின் பெயரும் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.











