டிரெய்லர் வெளியீட்டுக்குத் தயாரானது அயலான்
இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான்.
2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பல காட்சிகளை எடுத்திருந்தார்கள்.
4500 க்கும் மேற்பட்ட வரைகலைக் காட்சிகளைக் கொண்ட முதல் முழு நீளத் திரைப்படம் என்னும் பெருமை பெற்றிருக்கும் இப்படம் அதனாலேயே மேலும் தாமதமானது.
2023 தீபாவளியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் 2024 பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின், அக்டோபர் ஆறாம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் டீசர் வெளியிடப்பட்டது.
அடுத்து இப்படத்தின் டிரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியாகவேண்டும்.அதற்குத் தயாராகிவிட்டார்களாம்.
டிசம்பர் மாதம் இறுதியில் கிறிஸ்துமசையொட்டி இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்கிறார்கள்.
நேரடியாகச் சமூகவலைதளங்களில் வெளியிடாமல் ஒரு விழா வைத்து வெளியிடவிருக்கிறார்களாம்.
அயலான் வெளியாகும் அதேநாளில் தனுஷின் கேப்டன்மில்லர், ரஜினி கவுரவவேடத்தில் நடித்துள்ள லால்சலாம்,சுந்தர்சியின் அரண்மனை 4, விஜய்சேதுபதியின் மேரிகிரிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாவதாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதனால் டிரெய்லர் விழாவில் என்ன பேசப்போகிறார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கும் என்பதில் மிகையில்லை.











