October 25, 2021
சினிமா செய்திகள்

அனபெல் சேதுபதி படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவா? கெஸ்ட் ரோலா? – இயக்குநர் விளக்கம்

ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். தற்போது நடிகராகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவருடைய மகன் தீபக் சுந்தர்ராஜன் தற்போது இயக்குநராகியுள்ளார்.

விஜய்சேதுபதி, டாப்சி, யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியியுள்ள அனபெல் சேதுபதி படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு தன் மகனை அறிமுகம் செய்துவைத்தார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

அப்போது பேசிய அவர்,நாற்பதாண்டுகளாக ஊடகத்துறையினர் எனக்குப் பெரும் ஆதரவு கொடுத்துவருகிறீர்கள்.அதேபோல் என் மகனுக்கும் ஆதரவு கொடுக்கவேண்டும்.

நான் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் நேரடியாக இயக்குநரானேன். என் மகனிடம் நீ முறையாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு இயக்குநராக வேண்டும் என்று கூறினேன்.

இந்தப்படத்தின் கதை, தயாரிப்பாளர் போன்ற எந்த விவரமும் எனக்குத் தெரியாது. படம் முடிந்த பின் தயாரிப்பாளர் என்னிடம், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னார்.

படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதில் எந்த வருத்தமும் இல்லை, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எங்கள் காலத்தில் திரைப்படத்தைப் பார்க்க கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கிற்குச் சென்றேன் பார்த்தேன். ஆனால் தற்போது அனைத்தும் கைக்குள் அடங்கி விட்டது. எனவே இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் எந்த வருத்தமும் இல்லை

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கடுத்துப் பேசிய இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், இந்தப் படம் ஃபேண்டசி காமெடி வகையில் உருவாகியுள்ளது, குடும்பத்தோடு அனைவரும் இரசிக்கும் வகையில் படம் இருக்கும் என்றார்.

அனபெல் சுப்பிரமணியம் என்று இருந்தது அனபெல் சேதுபதி என்றானது எதனால்? எனக்கேட்டால், தொடக்கத்திலிருந்தே இரண்டு பெயர்களுமே பரிசீலனையில் இருந்தன. படத்தில் வீரசேதுபதி எனும் பெயரில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார் எனவே அனபெல் சேதுபதி என்றே வைத்துவிட்டோம். இது விஜய்சேதுபதிக்கும் பிடித்திருந்தது என்கிறார்.

இந்தப்படத்தில் அப்பா ஆர்.சுந்தர்ராஜனை ஏன் நடிக்க வைக்கவில்லை? என்று கேட்டதற்கு, அப்பா படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் போனால் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும்போது எங்களை அங்கிருந்து அனுப்பிவிடுவார். அவ்வளவு கூச்சம். அப்படியிருக்கும் போது அவரை நடிக்க வைத்து இயக்கும் எண்ணம் எனக்கு வரவில்லை என்றார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனா? கெளரவத்தோற்றத்தில்தான் நடிக்கிறாரா? எனக்கேட்டபோது, அவர்தான் கதாநாயகன் படத்தின் இரண்டாம்பாதி முழுக்க அவர் வருகிறார். அவர் மட்டுமின்றி படத்தில் இடம்பெறும் எல்லா வேடங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்றார்.

இப்படத்தின் திரைக்கதையில் விஜய்சேதுபதி அதிகம் தலையிட்டாரா? என்றால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அது தவறான தகவல் என்கிறார்.

இப்படத்துக்கு அடுத்து இதே நிறுவனம் தயாரிக்கும் படமொன்றை இயக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

முதல்பட இயக்குநர்களுக்கு அப்படம் வெற்றி என்றால்தான் அடுத்த படம் கிடைக்கும், இவருக்கு முதல்படம் வெளியாகுமுன்பே அடுத்த படம் கிடைத்திருக்கிறது என்பதால் முதல்படம் வருமுன்பே வெற்றியடைந்திருக்கிறது எனலாம்.

Related Posts