September 7, 2024
விமர்சனம்

பெல் – திரைப்பட விமர்சனம்

பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் பெல்.

இந்தப்படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வருகின்றனர். அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த எதிரநாயகன் குரு சோமசுந்தரம், அந்த மூலிகையைக் கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்றுப் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

ஒரு முழுமையான திரைக்கதை தெரிகிறதா? அதை புதுமையாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்புவன்.

நடன இயக்குநராகப் புகழ்பெற்ற ஸ்ரீதருக்குள் ஒரு நல்ல நடிகரும் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தப்படம். பார்வையற்றவர் வேடத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் வேடத்தின் தன்மையை உயர்த்திக்காட்டுகிறது.

ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் வருகிறார் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா. அவரும் குறைவைக்கவில்லை. நண்பராக
நடித்திருக்கும் தயாரிப்பாளர் பீட்டர், தேர்ந்த நடிகர் போலத் தெரிகிறார்.

நாயகி துர்காவும் நன்று, குறைவான வசதிகளில் நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளார். மற்றொரு நாயகி ஸ்வேதாவும் கவனிக்க வைக்கிறார்.

மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலே கதைக்களம் என்பதால் காட்சிகள் பசுமையாக அமைந்திருக்கின்றன. ஒளிப்பதிவாளர் பரணிகண்ணனுக்கு பாராட்டுகள்.

இராபர்ட்டின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம்.

தியாகராஜனின் படத்தொகுப்பில் தாழ்வில்லை.

வசனங்கள் எழுதியிருக்கும் வெயிலோன்,பழந்தமிழர் பெருமைகளோடு தற்கால பலவீனங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.

மூத்தோர் சொத்துகளை வைத்துக் கொண்டு பொருள் வேண்டி அலையும் அவல நிலையில் நம் இனம் இருக்கிறது என்பதை அம்பலம் ஏற்றும் இயக்குநரின் முயற்சிக்கு ஸ்ரீதர் மாஸ்டர், குரு.சோமசுந்தரம் உள்ளிட்ட படத்தில் பங்கு பெற்ற அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

பெல் – பழந்தமிழர் பெருமை பேசும் புதுமைப்படம்

– சங்கத்தமிழன்

Related Posts