January 22, 2026
சினிமா செய்திகள்

இறங்கி வந்த மணிரத்னம் – சாய்பல்லவி ஒப்புதல்

தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அதற்கு முன்னதாக,
இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம்.

அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.அதன்பின்,சில கதாநாயகர்களிடம் பேசிவிட்டு அவையும் கைகூடாத நேரத்தில் விஜயசேதுபதியிடம் பேசியிருக்கிறார்.

அவர் கதை என்ன? என்று கேட்டிருக்கிறார். சிம்புவுக்காக எழுதியிருந்த கதையை விஜய்சேதுபதியிடம் சொல்ல,அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டதாம்.

உடனே, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் மணிரத்னம்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டு சாய்பல்லவியை அணுகியிருக்கிறார்கள்.மணிரத்னம் படம் என்றதும் கேள்வி எதுவும் கேட்காமல் அவர் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்த்துக் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவரோ, கதை என்ன? அதில் என்னுடைய பங்கு என்ன? என்பதைத் தெரிந்தபின் முடிவு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.அதேநேரம் கதைகேட்க மணிரத்னம் அலுவலகத்துக்கு வர இயலாது.நான் சொல்லுமிடத்துக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணிரத்னம் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.ஆனாலும் வேறு வழியின்றி தனக்கு மிக நெருக்கமான நண்பரை அனுப்பி கதை சொல்ல வைத்திருக்கிறார்.

கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு.இதில் எனக்கு முக்கியத்துவம் இல்லை எனவே என்னால் இந்தக்கதையில் நடிக்கவியலாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

திடுக்கிட்ட மணிரத்னம் வெளியில் காட்டிக்கொள்ளாமல்,இப்போது வேறு நாயகி தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்படத்தில் சாய்பல்லவி நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று பல தரப்பிலிருந்து மணிரத்னத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால், வழக்கத்துக்கு மாறாக திரைக்கதையில் சாய்பல்லவி திருப்தியடையும் விதமாக சில மாற்றங்களைச் செய்தாராம்.அதன்பின் மீண்டும் சாய்பல்லவியிடம் கதை சொல்லியிருக்கிறார்கள்.

அதை அவர் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.அதனால் விஜய்சேதுபதி இணையராக நடிக்க ஒப்புக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சாய்பல்லவியை வைத்து புகைப்படப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

2026 சனவரியில் அதாவது, தை மாதம் பிறந்ததும் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குமென்றும் சொல்கிறார்கள்.

Related Posts