தொடங்குமுன்பே சிக்கலில் சிக்கிய பிரசாந்தின் அந்தகன் – காரணம் என்ன?
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் மொழி மாற்று உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தப் படத்தின் இயக்குநராக முதலில் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பல காரணங்களால் அவர் மாற்றப்பட்டார்.
அதன்பின், இந்தப்படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தியில் தபு நடித்த வேடத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கிறார் என்றும் அவர் தவிர இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் கார்த்திக் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்கள்.
2021 சனவரி முதல்நாளில் இப்படத்துக்கு அந்தகன் என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார்கள். அப்போதே இப்படம் 2021 கோடைவிடுமுறையில் வெளீயாகும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் இப்போதுவரை அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.ஏனென்று விசாரித்தால்?
என்ன நடந்ததெனத் தெரியவில்லை, இப்படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்ட ஜே.ஜே.பிரட்ரிக் உட்பட படக்குழுவினர் பெரும்பாலோனோர் இப்படத்தில் வேலை செய்யப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். என்ன சிக்கல்? என்பதைச் சொல்லாமல் அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டோம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.
பொதுவாகவே இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தியாகராஜனிடம் பணியாற்றும் எல்லோருமே மிகவும் நொந்துபோவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இப்போது படப்பிடிப்பு தொடங்காத நிலையிலேயே இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அதிருப்தியடைந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லப்படுவதால் இதற்கும் தியாகராஜன் தான் காரணமாக இருப்பார், இதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.
அதுதான் சரியா? வேறு ஏதேனும் காரணமா? என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் பேசினால் தெரியவரும்.










