சினிமா செய்திகள்

வெற்றிமாறன் விஜய்சேதுபதி படப்பிடிப்புக்குச் சிக்கல்

கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார்.

இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. அதன்பின் பொங்கலுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொல்லி திரும்பி வந்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க நினைத்து படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்தால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி வர மறுத்துவிட்டார்களாம்.

ஏனெனில், காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கவேண்டும், படப்பிடிப்புத் தளத்துக்கு சுமார் ஏழு கிலோமீட்டர் நடக்கவேண்டும் உணவு மற்றும் தேநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படுகிற சூழல் ஆகியனவற்றால் தொழிலாளர்கள் சலிப்படைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வேலை செய்ய சலிப்பா? என்றால், இல்லை, சென்னையில் எல்லா வசதிகளும் உள்ள திரைப்பட அரங்குகளில் நடக்கும் படப்பிடிப்புக்கு எவ்வளவு பேட்டா கொடுக்கப்படுகிறதோ அதே அளவுதான் அங்கும் கொடுக்கப்படுகிறதாம்.

இவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு பணிபுரிகிறவர்களுக்கு வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகக் கூலி கொடுத்திருந்தால் உற்சாகமாக வேலை பார்த்திருப்பார்கள்.

தன் படங்களில் பல நல்ல கருத்துகளைப் பேசும் வெற்றிமாறன், தன் படப்பிடிப்பில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு அடிப்படையான வசதிகள் கூடக் கொடுக்கவில்லை என்பதால் அப்படப்பிடிப்புக்குச் செல்ல தொழிலாளர்கள் மறுக்கிறார்களாம்.

Related Posts