சக்ரா – திரைப்பட விமர்சனம்
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் இணையம் மூலம் செய்யுங்கள் என்று அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது சக்ரா.
இராணுவ வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார் விஷால். அதன்பின் படம் முழுக்க ஓட்டம்தான். ஒரு விசாரணை அதிகாரி வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தி இருக்கிறார். ஒரேயொரு பெரிய சண்டைக்காட்சி. அதை அழகாகக் கையாண்டிருக்கிறார்.
காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ஷ்ரதாஸ்ரீநாத், ஒரு நல்ல உதவியாளராக இருக்கிறார்.
அங்கங்கே சிரிக்க வைக்கிறார் ரோபோ சங்கர்.
போலிஸ் கொல்லாதுன்னு சொன்னியே அக்கா என்று சொல்லிக்கொண்டே செத்துப்போகும் பிண்டு பாண்டு பரிதாபத்தைச் சம்பாதித்து கவனிக்க வைத்திருக்கிறார்.
உண்மையில் படத்தின் நாயகி என்றால் அது ரெஜினாதான். இடைவேளையில்தான் அவர் அறிமுகம் என்றாலும் பெண் சக்தி எவ்வளவு வீரியமானது என்பதைக் காட்டும் அவரது பாத்திரப்படைப்புக்கேற்ப நடித்து பாராட்டுப் பெறுகிறார்.
யுவனின் இசையில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிகளோடு கரைந்து போகிறது. பின்னணி இசை பலமாக அமைந்திருக்கிறது.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ஆனந்தனுக்கு இது முதல்படம். ஆனால் தேர்ந்த இயக்குநர் போல் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
மோடி போல் தோற்றம் கொண்டவரின் முகத்தில் குத்துவது தொடங்கி டிஜிட்டல் இந்தியாவால் ஏற்படும் தீமைகளை விளக்கியிருக்கிறார். பாடல்களே இல்லாமல் விறுவிறு திரைக்கதை அமைத்திருப்பது நன்று.
ரெஜினாவை வில்லியாக்கியதால் உடல்பலத்தைக் காட்டிலும் மூளைபலத்தை வெளிப்படுத்தும் பாத்திரப்படைப்பு புத்திசாலித்தனம்.
இந்திய இராணுவத்தின் பெருமைமிகு விருது அசோகச் சக்ரா – விஷாலுக்கு சக்ரா