தாயே இல்லா தாலாட்டு தந்த புதிய இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸிஸ்
பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேஷ், இயக்குநர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.
இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதைக் கூறும் காதல் கதை தான் இந்தப் படம். சண்டைக் காட்சிகள் இன்றி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜான் ஏ.அலெக்ஸிஸ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
பழகிய பார்வை மற்றும் எனக்கென்ன ஆச்சு? ஆகிய அவருடைய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாடல்கள் வெளியானபோதே அவற்றுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் நேற்று படம் வெளியானதும் பாடல்களுக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.

John A.Alexis
இந்நிலையில், அப்பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர் ஜான்.ஏ.அலெக்ஸிஸடம் ஓர் உரையாடல்….
1.உங்களைப் பற்றி….
சொந்த ஊர் மதுரை, சிறுவயதிலிலிருந்தே இசையின் மீது ஆர்வம். அதனால் பள்ளிப்படிப்போடு சேர்த்து இசையும் கற்றேன். அதன்பின் நானே சில தனிப்பாடல்கள் உருவாக்கினேன்.
2. திரைப்படத்துறைக்குள் வந்தது எப்படி?
என்னுடைய தனிப்பாடலை பழகியநாட்கள் இயக்குநர் ராம்தேவ் கேட்டிருக்கிறார். அது பிடித்துபோய் இந்தப்படத்தில் என்னை இணைத்துக்கொண்டார்.
3.இப்படத்தின் பாடல்கள் உருவானவிதம் குறித்து…?
பழகிய நாட்களில் பழகிய பார்வை எனும் முதல்பாடல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பாடலை கவிஞர் கபிலன் எழுதினார்.விஜய்டிவி சூப்பர்சிங்கர் புகழ் பாலாஜிஸ்ரீ பாடினார். காதல் உணர்வை வெளிப்படுத்தும் அப்பாடல் அனைவருக்கும் உற்சாகம் கொடுத்தது.

John A.Alexis – Kabilan
அதற்கடுத்து இயக்குநர் ராம்தேவ் எழுதிய எனக்கென்ன ஆச்சு பாடலை உருவானது. சத்யபிரகாஷ் ஸ்வேதாமோகன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.
இதற்கான டியூன் போட்டதும் அதைக்கேட்ட இயக்குநர் ராம்தேவ், ட்யூன் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இந்த ட்யூனைக் கேட்டதும் பாடல் எழுதும் ஆர்வம் வந்து பாடலை நானே எழுதிவிட்டேன் என்றார் இயக்குநர்.
முதல்படத்திலேயே இரண்டு மெல்லிசைப்பாடல்கள் அமைந்ததில் மகிழ்ச்சி.
4. அடுத்து..?
தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வருகின்றன. அவை மட்டுமின்றி இண்டிபெண்டண்ட் ஆல்பங்கள் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.என்னுடைய ஓர் இனம் ஆல்பத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்படுகின்றன. அதுபோல் இன்னும் பலவற்றைச் செய்யவிருக்கிறேன்.
இசையில் தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர் தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கையான புதுவரவாக இருக்கிறார்.
மென்மேலும் பல உயரங்களைத் தொடவிருக்கும் அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.











