சினிமா செய்திகள்

விஜய்யின் தி கோட் வியாபாரத்தில் சுணக்கம் – படக்குழு அதிர்ச்சி

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 2,2023 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது முதல் விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் முதல்பார்வை, இரண்டாம்பார்வை மற்றும் மூன்றாம் பார்வை ஆகியன வெளியிடப்பட்டிருக்கின்றன.

பொதுவாக இம்மாதிரி வெளியிடுவது சம்பந்தப்பட்ட படத்தின் வியாபாரத்துக்கு உதவும் என்பதற்காகவே இருக்கும்.ஆனால் விஜய் படத்துக்கு அப்படியிருக்காது என்றுதான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே படத்தின் வியாபாரத்தை முடித்துவிடவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைத்திருக்கிறது. அதன் காரணமாகவே அடுத்தடுத்த பார்வைகள் வெளியாகின என்கிறார்கள்.

ஆனாலும், படக்குழுவினர் அதிர்ச்சி அடையும் வகையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையாம்.

முதலில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமையை விற்றுவிட எண்ணினார்களாம். ஆனால் அதுவும் இறுதியாகவில்லையாம்.

ஏனெனில்,முந்தைய படமான லியோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் எண்பது கோடிக்கும் இணைய உரிமை சுமார் நூற்றிருபது கோடிக்கும் விற்பனை ஆகியிருக்கிறதென்கிறார்கள்.

இந்தப்படத்தை அதைவிட அதிகத் தொகைக்குக் கொடுக்கவேண்டும் என்பது படக்குழுவின் திட்டம். ஆனால் அந்த விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையென்பதால் பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் இழுத்துக்கொண்டேயிருக்கிறதாம்.

அதேபோல், லியோ படத்தின் எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாட்டு விநியோக உரிமை சுமார் அறுபது கோடிக்கு விற்பனை ஆனதாம்.

இந்தப்படத்துக்கு அதைவிடக் கூடுதல் விலை சொல்கிறார்களாம். அந்த அறுபதுகோடியே முழுமையாக வசூலாகவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தை அதைவிட அதிக விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லை என்று சொல்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தைவிட அதிகச் சம்பளம் விஜய்க்குக் கொடுத்திருக்கலாம்.அதனால் அதிகவிலைக்கு விற்பனை செய்ய நினைக்கலாம். ஆனால் பெரும் விலை கொடுத்து வாங்கி நட்டப்பட யாரும் தயாராக இல்லை எனவேதான் இந்த வியாபாரங்கள் முடிவடையவில்லை என்கிறார்கள்.

அதோடு, இந்தப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வைகள் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை என்பது வியாபார வட்டத்தினரின் கருத்து.

இந்தக் காரணங்களால் தி கோட் படத்தின் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்கிறார்கள்.இதைச் சற்றும் எதிர்பாராத படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts