சேயோன் படம் கைவிடப்பட்டது? – பரபரக்கும் புதிய தகவல்
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார்.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
கிராமியப் பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடிக் காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் இரசிக்கும்படியான படமாக சேயோன் உருவாகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
சேயோன் பட அறிவிப்பு வெளியானபோதே, இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள்.அதன்படி மார்ச் 27 முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டார்கள்.ஆனால்,சில காரணங்களால் நினைத்தபடி தொடங்கவில்லை.
இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
படப்பிடிப்பு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தவேண்டியிருக்கிறது.பல இடங்களில் வெளிப்புறப்படப்பிடிப்பும் இருக்கிறதாம்.
இப்போது தேர்தல் பரப்புரைகள் நடந்துகொண்டிருப்பதால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்குவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அதன்படி, ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே,அந்தப்படம் மொத்தமாகக் கைவிடப்பட்டுவிட்டது என்றொரு அதிர்ச்சித் தகவல் திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஏன் இப்படி ஒரு தகவல்? என்று விசாரித்தால்,
சேயோன் படப்பிடிப்பு ஏப்ரல் 27 என்று இருந்ததில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.முதலில் படப்பிடிப்புக்கருவிகளோடு சிலர் மட்டும் சென்று கள்ளழகர் ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட மக்கள் கூட்டம் சேருமிடங்கள் மற்றும் சில வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்களாம்.
மே 15 ஆம் தேதி முதல் முழுமூச்சாகப் படப்பிடிப்பு தொடங்கும் என்று அப்போதிருந்து சிவகார்த்திகேயனும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
முதலில் மார்ச் 27 முதல் படப்பிடிப்பு என்று சொன்னார்கள் அடுத்து ஏப்ரல் 27 என்றார்கள்.இப்போது அந்தத் தேதியிலும் இல்லாமல் மே 15 ஆம் தேதி படப்பிடிப்பு என்று சொல்லப்படுகிறது.
இதனாலேயே அந்தப்படம் நின்றுவிட்டது என்கிற பேச்சு உலவுகிறதென்று ஒருதரப்பும் நெருப்பில்லாமல் புகையவில்லை என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.
இரண்டில் எது சரியென்பது? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.











