சினிமா செய்திகள்

மாரீசன் தமிழ்நாடு வியாபாரம் – விலை உள்ளிட்ட விவரங்கள்

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் மாரீசன். இந்தப் படத்திற்கான முனோட்டத்தில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன.இப்படத்தில் பகத்பாசில் ஏற்றிருக்கும் வேடமும் வடிவேலு ஏற்றிருக்கும் வேடத்தில் அவருடைய ஆகச் சிறந்த நடிப்பும் படத்தைப் பெரிய அளவில் பேச வைக்கப்போகிறதெனெ படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

வி.கிருஷ்ணமூர்த்தி கதை,திரைக்கதை,வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,சித்தாரா, பி.எல்.தேனப்பன்,லிவிங்ஸ்டன், ரேணுகா,சரவணா சுப்பையா,’ஃபைவ் ஸ்டார்’கிருஷ்ணா,ஹரிதா,டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார்.

கிராமியப் பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில்
ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 98 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படம் ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை தியா மூவிஸ் என்கிற நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தியா மூவிஸ் நிறுவனம் பிரதீப் என்பவருடையது.இவர் தமிழ்த் திரைப்படங்களின் இந்தி உரிமையை விற்றுக் கொடுக்கும் முகவராகச் செயல்படுபவர்.

இப்போது இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறார்.

இவருக்கு இதில் அனுபவம் இல்லையே? எப்படி படத்தை வெளியிடுவார் என்று கேட்டால்? அவர் இந்தப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

இப்படத்தை சுமார் ஏழு கோடி விலை கொடுத்து தியா மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது எனச் சொல்லப்படுகிறது.

எம்ஜி எனப்படும் குறைந்தபட்சப் பாதுகாப்பு அடிப்படையில் இந்த வியாபாரம் நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts