பிரேக் ஃபாஸ்ட் – திரைப்பட விமர்சனம்
பணக்காரப் பெண்ணும் ஏழைப்பையனும் காதலித்தால் பெண்வீட்டில் கடும் எதிர்ப்புவரும்.அந்த எதிர்ப்பை மீறி அவர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்லும் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.இப்படத்தில் அதிலிருந்து ஒருபடி மேலே போய் தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதலனைக் கைப்பிடிக்கிறார் நாயகி. சேர்ந்த வேகத்திலேயே அவர்கள் பிரிந்தும் போகிறார்கள்.அது ஏன்? அதன் முடிவு என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் இந்தப்படம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினால் அறியப்பட்ட ராணவ்,இந்தப்படத்தின் நாயகனாகியிருக்கிறார்.காதல் காட்சிகளில் உற்சாகம் ததும்ப நடித்திருக்கிறார்.மற்றபடி திருமணத்துக்கு முன் பெற்றோர் பற்றிய சிந்தனை, திருமணத்துக்குப் பின் மனைவியின் எதிர்பாரா நடவடிக்கைகளால் ஏற்படும் அதிர்ச்சி ஆகிய ஆழமான உணர்வுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
மலையாளத்தில் தெரிந்த முகம் தமிழுக்கு அறிமுகமான நாயகி ரோஸ்மின், பணக்காரப் பெண்களின் திமிர்த்தனத்தையும் ஆதிக்க குணத்தையும் சரியாக வெளிப்படுத்தி வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.அவர் சம்பாதிக்கும் வெறுப்பு படத்துக்குப் பலம்.
இந்தக்கதையின் இன்னொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் இணையர்,முதல் இணையரிடம் தவறிய இளமைக்கேற்ற துள்ளல்கள் மற்றும் மோதல்கள் ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் மிக முக்கியமான நாயகியின் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார் சம்பத் ராஜ்.நாயகனின் அம்மாவாக அர்ச்சனா நடித்திருக்கிறார்.ஒருவரும் இருவேறு வர்க்கத்தினரின் பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள். மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரியும் நன்று.
படத்தின் கதை திரைக்கதை எப்படியிருந்தாலும் காட்சிகள் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம்.அதனால் காட்சிகளில் இனிமை சேர்ந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது.
எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகியோரது படத்தொகுப்பு,படத்தைச் சலிப்பின்றி கொண்டு செல்ல முயன்றிருக்கிறது.
காதல் என்றால் இரண்டுபேர் மட்டும் சம்பந்தப்பட்டதன்று அது இரண்டு குடும்பங்கள் மற்றும் அவர்களுடைய குணநலன்களும் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி, ஒரு காதல், அதன் இணைவு, அதற்குப் பின்னான பிரிவு என்று திரைக்கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா.
வேகமான காதல், அதைவிட வேகமான மோதல் என்று போய்க்கொண்டிருக்கும் இளையதலைமுறைக்கு விரல்நீட்டிப் பாடம் சொல்லாமல் கண்டுணரும்படி காட்சிகளையும் அமைத்திருக்கிறார்.
– இளையவன்











