சினிமா செய்திகள்

மேலும் தாமதமாகும் இரண்டு வானம்? – காரணம் என்ன?

2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப் பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது என்று சொல்லியிருந்தார்கள்.அதன்பின்,தனுஷ் 43 ஆக மாறன் படம் வெளியானது.

அதன்பின், ராம்குமார் தனுஷ் படம் நடக்காது என்று சொல்லிவிட்டார்கள்.அதேசமயம் அதேநிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தை ராம்குமார் இயக்குகிறார் என்கிற செய்திகள் வெளியாகின.அதுவும் நடக்கவில்லை.

அதன்பின்,முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.2023 சனவரி 20 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம்.அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி மமிதாபைஜுவும் இருக்கும் முதல்பார்வை வெளியிடப்பட்டது.

இப்படத்துக்கு இசை: திபு நினன் தாமஸ்,ஒளிப்பதிவு: தினேஷ் கே.பாபு,படத்தொகுப்பு: சான் லோகேஷ்,கலை இயக்கம்: கோபி ஆனந்த்,

இம்மாதத் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி, இப்படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.படத்தின் நாயகன் விஷ்ணுவிஷாலும் அதை உறுதி செய்திருந்தார்.

ஏப்ரல் முடிகிறது மே மாதத்தில் எப்போது அந்தப்படம் வெளியாகும் என்று விசாரிக்கப்போனால், அந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

என்ன சுணக்கம்?

இந்தப்படத்துக்காக நாயகன் விஷ்ணுவிஷால் இன்னும் டப்பிங் எனப்படும் குரல்பதிவை முடித்துத் தரவில்லையாம்.ஏனென்றால்? இப்படத்துக்கு ஒரு முன்பணம் கொடுத்த பின்பு நாயகனுக்குப் பணம் எதுவும் கொடுக்கப்படவில்லையாம்.அதனால், இப்போது இரண்டு கோடி பணம் கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று அவர் சொல்லிவிட்டாராம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகமானது உட்பட பல காரணங்களால் மொத்தச் செலவு திட்டமிட்டதைவிடப் பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்றும் அதனால் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்படும் நேரத்தில் உலவும் இந்தத் தகவல் மேலும் சிக்கல் அதிகரித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

Related Posts