மே 10 ஆம் தேதி வெளியாகிறது உயிர்தமிழுக்கு – அதிரடி காட்டும் அமீர்
இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு.மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இப்படத்தில், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் திரும்ப வந்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் அமீர் கூறியதாவது…
இந்தப் படம் மொழியைப் பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையைப் பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தித் திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்தத் தலைப்பு தற்போது அவசியமாகிறது என்றார்.
இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதிரடி அரசியல் வசனங்கள் நிறைந்துள்ள அந்த முன்னோட்டத்தில் அமீர் பேசும்,துப்பாக்கி தோட்டா கொண்டு என் தலையை துளைத்தாலும், பீரங்கியால் என்னைச் சுட்டுப் போட்டாலும் பிரியமுள்ள என் தமிழை உயிரிலிருந்தும் உடலில் இருந்தும் பிரிக்க முடியாது, பிரிக்க நினைப்பவர்கள் உயிர் பிழைக்க முடியாது என்கிற வசனம் தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் மே 10 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் அமீர் ஒரு வழக்கில் சிக்கியிருப்பதால் மன வருத்தத்தில் இருந்த அவருடைய இரசிகர்கள்,அவர் கதாநாயகனாக நடிக்கும் உயிர்தமிழுக்கு பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா,அமீர் கதையின் நாயகன் அல்ல.கதாநாயகன் தான் என்று கூறியிருந்தார்.இப்படம் வெளியாகி வசூலிலும் கதாநாயகனாக இருக்கும் என்று படம் பார்த்தோர் கூறுகின்றனர்.










