அஜீத்துக்கு அமையாதது அருண்விஜய்க்குக் கிடைத்தது
தமிழ்த் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும்,பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம் தனது மூன்றாவது படத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது.
அருண் விஜய்யின் 36 ஆவது படமாகத் தயாராகும் இப்படத்தை, ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.
இப்படத்தில், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.அன்பறிவு மற்றும் பிரபு ஆகியோர் இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, அந்நிறுவன தலைமைத் திட்ட இயக்குநர் டாக்டர் எம்.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்கிறார்.
தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள ஏப்ரல் 4 அன்று நடைபெற்றது.
தொடக்கவிழாவில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அப்போது சொல்லியிருந்தனர்.
அதன்படி அப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று வெளியாகவிருக்கிறது.
இந்தப்படத்துக்கு ரெட்டதல என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்தப் பெயர் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருந்த படத்துக்கு வைக்கப்படவிருந்த பெயர்.அப்படம் நடக்கவில்லை.
அதனால், தன்னுடைய சிஷ்யர் இயக்கும் இந்தப்படத்துக்கு அந்தப்பெயரைக் கேட்டதும் கொடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
அஜீத்துக்கு அமையாத அந்தப் பெயர் அருண்விஜய்க்கு அமைந்திருக்கிறது. இதனால் இப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அருண்விஜய் இரசிகர்கள் கொண்டாடித்தீர்ப்பார்கள் என்பது உறுதி.