ரஜினி படத்துக்கு சரத்குமார் படப்பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் வேட்டையன்.ரஜினியின் 170 வது படமான அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.
இந்தப்படத்தின் பெயர் மற்றும் அறிமுகக் காணொலி இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது.இந்தப் படத்துக்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக ந்டித்த படம் கூலி.1995 ஆம் ஆண்டு அந்தப்படம் வெளியானது. அந்தப் பெய்ரை சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
வழக்கமாக ரஜினி நடித்த படத்தின் பெயர்களை மற்ற நடிகர்களின் படங்களுக்கு வைப்பார்கள்.இப்போது சரத்குமார் படத்தின் பெயரை ரஜினி படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
லோகேஷ்கனகராஜ் படங்களில் பழைய படங்களின் பாடல்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்தப்படத்தில் கூடுதலாக, ரஜினியின் ‘ரங்கா’ திரைப்படத்தின் வசனமான. “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியேன்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே” என்ற வசனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு தங்கமகன் படத்தில் இடம்பெற்ற டி ஐ எஸ் ஓ டிஸ்கோ டிஸ்கோ எனும் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.
மூன்று நிமிடங்கள் ஓடும் அறிமுகக் காணொலி முழுவதும் ரஜினி நிறைந்திருக்கிறார்.ஆனால் இதற்காக அவர் நடித்தது சுமார் இரண்டரை மணி நேரம்தான் என்கிறார்கள்.
அறிமுகக் காணொலியைப் பார்த்து ரஜினியே,கொஞ்ச நேரம் தான் என்னை வைத்து எடுத்தாங்க ஆனால் டீச்ர் சூப்பரா வந்திருக்கு என்று வியப்புடன் பாராட்டினார் என்று சொல்கிறார்கள்.
படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையர் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.
ரஜினி இரசிகர்கள் இந்த அறிமுகக் காணொலியை வரவேற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.










