சினிமா செய்திகள்

புஷ்பா 2 தள்ளிப்போக பவன் கல்யாண் காரணம்? – பரபரக்கும் புதிய தகவல்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது.

‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து படத்தின் குறுமுன்னோட்டம் வெளியானது. தெலங்கானா பழங்குடி மக்களின் திருவிழாவான ‘ஜடாரா’வுடன் தொடங்கும் அந்த குறுமுன்னோட்டத்தில் காதில் தோடு, காலில் சலங்கை, கழுத்தில் மாலை, ஆபரணங்களுடன் சேலை அணிந்து வித்தியாசமான ஒப்பனையுடன் புதுவித தோற்றத்தில் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜூன்.

அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. ‘புஷ்பா புஷ்பா’ என்கிற பாடலும் ‘சூசெகி’ என்கிற பாடலும் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் வெளியீடு சுமார் மூன்றரை மாதங்கள் தள்ளிப்போய்விட்டது. டிசம்பர் ஆறாம் தேதி படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடைசி நேரத்தில் படம் தள்ளிபோனது ஏன்? என்பதற்கு,படத்தின் வேலைகள் நிறைவடையாததே காரணம் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

அதைத் தாண்டி பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.அவற்றில் ஒன்று தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் மட்டுமின்றி தெலுங்கு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

அது என்ன?

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. அதில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சந்திரபாபு நாயுடு பவன்கல்யாண் கூட்டணி ஆகியன எதிரெதிராக நின்றன.

தேர்தல் பரப்புரைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நந்தியால் சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் சென்றார்.ரவீந்திர கிஷோர் ரெட்டி, அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் அங்கு சென்றிருக்கிறார்.

அவர் வந்த செய்தி பரவி,அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான இரசிகர்கள், ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டின் முன் திரண்டனர். அப்போது அவர்கள் முன்னால் ரவீந்திர கிஷோர் ரெட்டியின் கையோடு கை சேர்த்து உயர்த்திக் காண்பித்தார் அல்லுஅர்ஜூன்.

இந்நிகழ்வு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏனெனில்,அல்லு அர்ஜுனின் மாமாவும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரின் வீட்டிற்கு அவர் வந்ததும், பின்னர் அப்பகுதியில் கூடியிருந்த மக்களை இருவரும் சேர்ந்து சந்தித்ததும் தான் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்படக் காரணங்கள்.

இதனால் அல்லுஅர்ஜுனுக்கு பவன்கல்யாண் இரசிகர்கள் பெயரில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அதன்பின், பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார் அல்லு அர்ஜூன்.அதனால் அந்த சர்ச்சை ஓய்ந்தது.

அதற்கும் புஷ்பா 2 தள்ளிப்போனதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதுதான் இப்போது பேசப்படும் இரகசியம் என்று சொல்லப்படுகிறது.

இப்போது ஆந்திர பிரதேச துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பொறுப்பேற்றிருக்கிறார். புஷ்பா 2 படத்தில் வில்லன்களில் ஒருவர் போல் அல்லது வில்லன் கூட்டத்துக்குத் தலைவர் போல் துணை முதலமைச்சர் இருக்கிறார் என்று இருந்ததாம்.

ஏற்கெனவே சர்ச்சை இருக்கும் நிலையில் இப்போது இப்படியே படம் வெளியானால் பெரும் சிக்கல் ஏற்படும் என நினைத்து அதில் மாற்றம் செய்திருக்கிறார்களாம். அதனால் இன்னும் முப்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம்.

அதனால்தான் பட வெளியீடு தள்ளிப்போனது என்று சொல்கிறார்கள்.

Related Posts