விஜய்யால் சுமார் நூறுபேர் ஓட்டுப்போடவில்லை – கிளம்பிய புதுசர்ச்சை
நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக இரஷ்யாவிலிருந்து நாடு திரும்பினார் விஜய் என்று செய்திகள் வந்தன.அவரும் பெருங்கூட்டத்துடன் வந்து வாக்களித்தார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் விஜய், ஓட்டுப்போட வராமல் இருந்தால் குற்றமாகிவிடும் என்பதால் இரஷ்யாவிலிருந்து வந்து வாக்களித்தார்,படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதே ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் நான் ஓட்டுப்போடவேண்டும் அதற்கேற்ப படப்பிடிப்பைத் திட்டமிடுங்கள் எனச் சொல்லித்தான் கிளம்பிப் போனார்.சொன்னபடியே வந்து வாக்களித்தார் என்று பெருமை பேசுகின்றனர் அவருடைய இரசிகர்கள்.
அதேநேரம், விஜய்யின் சுயநலத்தால் சுமார் நூறு பேர் வரை வாக்களிக்கமுடியாமல் போய்விட்டது என்று சிலர் சொல்கின்றனர்.
என்ன நடந்தது?
இரஷ்யாவில் படப்பிடிப்புக்கு விஜய் மட்டும் செல்லவில்லை, அவருடன் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் நூறுபேர்வரை அங்கு சென்றிருக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிவடைந்தால் அதில் நடிக்கும் நடிகர்கள் உடனடியாக வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் உட்பட பணியாற்றும் அனைவருக்கும் மேலும் சில மணிநேரம் வேலை இருக்கும்.அவற்றை முடித்துவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும்.உள்ளூரிலேயே இப்படி என்றால் வெளிநாடு என்றால் கேட்கவே வேண்டாம்.படப்பிடிப்பு மொத்தமாக முடிந்தாலும் படக்குழுவுக்கு ஓரிரு நாட்கள் வேலை இருக்கும்.அவற்றை முடித்துவிட்டுத்தான் நாடு திரும்ப வேண்டும்.
அப்படியிருக்கும்போது ஏப்ரல் 15 வரை அங்கே படப்பிடிப்பில் விஜய் இருந்திருக்கிறார்.முடிந்தவுடன் அவர் நாடு திரும்பிவிட்டார்.அதன்பின் அவர் இல்லாத காட்சிகளைப் படமாக்கினார்களாம்.அதனால்,இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் நாடு திரும்பவில்லை. அவர்கள் ஓட்டும் போடவில்லை.
இதுதொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்டால், நாங்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 18 காலையில் சென்னை வருகிற மாதிரி திட்டமிட்டிருந்தோம், ஆனால் துபாயில் பெய்த பெருமழை காரணமாக விமானங்கள் எல்லாம் இரத்து செய்யப்பட்டதால் எங்களுக்கும் சிக்கலாகிவிட்டது.அதனால் வரமுடியவில்லை என்று சொன்னார்கள்.
அதிலும் ஒரு வில்லங்கம்,அப்படி வரவிருந்தது இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் முன்னணியினர்தானாம்.மற்றவர்கள் எல்லாம் 20,21 தேதிகளில் சென்னை வருகிற மாதிரிதான் பயணம் திட்டமிட்டப்பட்டிருந்ததாம்.
இதற்கு விஜய் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
நான் ஓட்டுப்போட வேண்டும் அதற்கேற்பத் திட்டமிடுங்கள் என்று சொன்ன விஜய், எல்லோரும் ஓட்டுப்போடவேண்டும் அதற்கேற்பத் திட்டமிடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.அந்த எண்ணம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை என்பதை நடந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. தன்னைத் தாண்டி தன்னுடன் பணிபுரிபவர்களைப் பற்றிக்கூடச் சிந்திக்கத் தெரியாதவர்தான் விஜய் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.