மனக்கசப்பு மறைந்தது – விஜய்சேதுபதி படத்தில் ஸ்ருதிஹாசன்

விஜய்சேதுபதி நடிக்கும் படம் டிரெயின். மிஷ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த டிரெயின் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப்படத்துக்கு பெளசியா ஒளிப்பதிவு செய்கிறார்.மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.
சென்னையில் மிகப்பெரிய தொடர்வண்டி நிலைய அரங்கம் அமைத்து பெரும்பகுதிப் படத்தைப் படமாக்கியவர்கள், மேட்டுப்பாளையம் போய் தொடர்வண்டி நிலையத்தின் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.
அதன்பின்,எடுத்தவற்றைத் தொகுத்துப் பார்த்த பின்பு இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இன்னும் பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டுமாம்.
இந்நிலையில், படத்தின் பாடல்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறாராம் மிஷ்கின்.முதலில் படத்தில் ஒரு பாடல் மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.இப்போது நான்கு பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம் மிஷ்கின்.
அவை அனைத்தும் படத்தில் இடம்பெறுமா? கேட்பதற்காக மட்டும் இருக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
இந்த நான்கு பாடல்களில் ஒரு பாடலை மிஷ்கினே பாடியிருக்கிறார்.இன்னொரு பாடலைப் பாட ஸ்ருதிஹாசனை அழைத்திருக்கிறார் மிஷ்கின்.
அவரும் மிஷ்கின் இசையில் பாட ஒப்புக்கொண்டாராம். அண்மையில் ஸ்ருதிஹாசன் பாடி ஒலிப்பதிவும் முடிந்துவிட்டது என்கிறார்கள்.இந்தப்பாடல் படத்தில் இடம்பெறுகிறதோ இல்லையோ படத்தின் விளம்பரங்களுக்குப் பயன்படுகிற மாதிரி திட்டமிட்டு ஒலிப்பதிவு செய்ததை ஒளிப்பதிவும் செய்து வைத்திருக்கிறார்களாம்.
விஜய்சேதுபதியும் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த படம் லாபம்.அப்படத்தின் இறுதியில் ஏற்பட்ட விரும்பத் தகாத நிகழ்வுகளால் விஜய்சேதுபதிக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது என்பார்கள்.
இப்போது அதைக் கருத்தில் கொள்ளாமல் மிஷ்கின் அழைத்ததும் ஒப்புக்கொண்டு வந்து பாடியிருக்கிறார் ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பாடலை நாட்டுப்புறப்பாடகி சின்னப்பொண்ணு பாடி நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
இயக்குநராக வெற்றி பெற்றதோடு அதில் தன்னுடைய தனித்தன்மையையும் நிரூபித்திருக்கிறார் மிஷ்கின். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் டெவில்.அப்படத்தில் பாடல்கள் வரவேற்புப் பெறவில்லை படமும் சரியாகப் போகவில்லை.
இசையமைப்பாளராக அந்தப் படத்தில் விட்டதை இந்தப்படத்தில் பிடித்துவிடும் முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின் என்று சொல்கிறார்கள்.அதனால்தான் செலவுக் கணக்கைக் கருத்தில் கொள்ளாமல் ஸ்ருதிஹாசனை அழைத்துப் பாட வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.