சினிமா செய்திகள்

தொடங்கும் முன்பே கைவிடப்பட்ட அதர்வா படம் – விவரங்கள்

யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு, கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம்.

இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் இயக்குநர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.வி.ஆனந்திடம் பணியாற்றிய ஆர்.பிரேம்நாத் இயக்குகிறார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் மேஜர்ரவி இயக்குநர் அதர்வா கதாநாயகன் என ஒரு படம் எடுக்க முடிவானது.அதற்காக அதர்வாவை அழைத்து வந்தவர் இயக்குநர் மேஜர்ரவி.அவர் சொன்ன கதை பிடித்து கதாநாயகனாக அதர்வா என்பதை ஏற்று இருவருக்கும் கணிசமான தொகை முன்பணம் கொடுத்தாராம் தயாரிப்பாளர் பி.இரங்கநாதன்.

அதன்பின்,அப்படத்துக்காக காஷ்மீர் போய் படப்பிடிப்பு நடத்தும் இடங்களைத் தேர்வு செய்துவந்தாராம் இயக்குநர் மேஜர்ரவி.படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்கிற நிலையில், இந்தக்கதை வேண்டாம் கதையை மாற்றுங்கள் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார் அதர்வா.

அதைகேட்டு கோபமான மேஜர்ரவி, முதலில் உங்களிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியபின்புதானே எல்லா வேலைகளும் நடந்தன.இப்போது கதையை மாற்றச் சொன்னால் எப்படி? என்று கேட்டிருக்கிறார்.

ஆனால்,கதையை மாற்றினால் நடிக்கிறேன் என்று பிடிவாதமாக இருந்தாராம் அதர்வா. அதனால் கடுப்பான மேஜர்ரவி, நான் கதையை மாற்றமாட்டேன்,கதாநாயகனை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

அதற்க்டுத்து அடுத்த சிக்கல் வந்திருக்கிறது. உங்கள் நிறுவனத்தில் படம் நடிக்க விருப்பமில்லை என்று தயாரிப்பாளரிடமும் சொல்லிவிட்டாராம் அதர்வா.

இந்தப்படத்துக்காக நிறையச் செலவு செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும்போது இயக்குநரையும் அனுப்பிவிட்டு நானும் நடிக்கமாட்டேன் என்று சொன்னால் எப்படி? எனக்கு ஒரு படம் நடித்தாக வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

அதன்பின், அதர்வா இயக்குநர் எம்.இராஜேஷை தயாரிப்பாளரிடம் அனுப்பியிருக்கிறார்.அவர் சொன்ன கதை திருப்தியாக இருந்ததால் தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார்.

அதன்பின் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல்வாரத்தில் இந்நிறுவனம் ஒரு புதிய பட அறிவிப்பை வெளியிட்டது.

அப்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் பி.இரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். இரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்குப் பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம்.இராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது.

தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது…

திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்குக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காகச் செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் இராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விசயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்துத் திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது என்றார்.

இயக்குநர் எம்.இராஜேஷ் கூறும்போது….

காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா இரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை.பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்ற தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி.ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் இரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிப்பாளர் பி.இரங்கநாதன் கூறியதாவது….

இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில் எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் இரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன்.அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் இரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்குப் படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த வகையிலான படம்தான் இது.அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காகப் பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும்.அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்றார்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் இந்த அறிவிப்பு வந்ததோடு சரி.அதன்பின் இப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை,அதேசமயம் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து கொண்டிருந்தனவாம்.

ஆடிப்பிறப்புக்கு முன்பு படத்தின் தொடக்கவிழா மற்றும் படப்பிடிப்பு என்று திட்டமிட்டுப் பணியாற்றி வந்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. மாறாக அப்படம் மொத்தமாகக் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

புடபூசை நடக்கும் என்று சொல்லப்பட்ட நாளுக்கு முன்பாக நாயகன் அதர்வாவிடம் போய்,இப்படத்தை என்னால் எடுக்க இயலாது என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

அதற்குக் காரணம், இப்போது திரைப்படங்களின் இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனையாவதே இல்லை அல்லது விற்ப்னை செய்வது ரொம்ப சிரமம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.அதனாலேயே இந்தப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

சம்பந்தப்பட்டோருக்கே வெளிச்சம்.

Related Posts