November 2, 2024
சினிமா செய்திகள்

விஜய் தலையில் பலத்த அடி – தி கோட் படப்பிடிப்பில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.திலீப்சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்படிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு இரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து முடிந்தது.

இப்போது சென்னையில் நடந்து வருகிறது.

இடையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் வாக்களிக்க வந்தார்.

எப்போதும் இல்லாத வகையில் வாக்களிக்க வந்த விஜய்யின் தோற்றம் மற்றும் நடை உடைகள் விமர்சனத்துக்கு ஆளாகின.

அதற்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது.அது இரஷ்யாவில் நடந்திருக்கிறது.

இரஷ்யாவில் பெரிய சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்போது மிகவும் ஆபத்தான ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கும்போது டூப் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.அதை மறுத்து அந்தச் சண்டையை நானே செய்கிறேன் என்று விஜய் பிடிவாதமாகச் சொல்லி அப்படியே செய்திருக்கிறார்.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டதாம். தலையில் பலத்த அடி மட்டுமின்றி கை கால்களில் பெரும் சிராய்ப்புகள் ஏற்பட்டதோடு ஓரிரு இடங்களில் எலும்பிலும் அடிபட்டுவிட்டதாம்.உடனடியாக அங்கேயே முதலுதவிகள் செய்து கொண்டு சென்னை வந்துவிட்டாராம். சென்னை வந்தும் மருத்துவம் தொடர்ந்திருக்கிறது.

வாக்களிக்க வந்தபோது தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடாமல் முடியமைப்பு செய்து கொண்டு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டுதான் வாக்களிக்க வந்திருக்கிறார்.அதனால்தான் அவரிடம் மாற்றம் தெரிந்திருக்கிறது.

உடலெல்லாம் அடிபட்டும் சனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக வாக்களிக்க வந்த விஜய் அதன்பின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா? என்றால் இல்லை.

அடுத்த ஓரிருநாட்களிலேயே சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.அந்தப் படப்பிடிப்புக்கும் வழக்கம்போல வந்துவிட்டாராம் விஜய்.

ஏனெனில்,விஜய் ஓய்வெடுத்தால் உடன் நடிக்கும் நடிகர்களின் தேதிகளில் சிக்கல் ஏற்படும் என்கிற நிலை.அதனால் விஜய் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

உச்சநட்சத்திரம் என்றாலும் அவருக்கு உடலெங்கும் அடிபட்டாலும் ஓய்வெடுக்க இயலாத நிலை என்பதுதான் எதார்த்தம்.

Related Posts