September 30, 2026
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயனின் முதல்படம் – சுவாரசிய தகவல்

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.எட்டாண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தற்போது ’அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே,நடிகையும் இயக்குநருமான லட்சுமிராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் தான் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.

அவரிடம்,ஏப்ரல் 12 அன்று காலை ‘குறள் 786’ என்று பெயரிடப்பட்ட ஒரு முன்னோட்டத்தைப் பகிர்ந்த ஒருவர், “மேடம். இந்த குறும்படத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள். காத்திருக்கிறோம் என்றார். அவர் பகிர்ந்த முன்னோட்டத்தில் சிவகார்த்திகேயன், அபிநயா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதன் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னிடம் கேள்வி எழுப்பியவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கும் பதிலில்….

இது ஒரு குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. அவரை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. நான் அதை கைவிட்ட பிறகுதான் அவர் ‘மெரினா’ படத்தில் நடித்தார். ‘குறள் 786’ படத்தில் அவருக்குச் சிறப்பான கதாபாத்திரம்.

ஆனால் அது இல்லாமலேயே வணிக ரீதியாகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுவிட்டார். கதாநாயகியாக அபிநயா நடிக்கவிருந்தார். அவரோடு பணிபுரிய விரும்பினேன். இன்ஷா அல்லாஹ், இன்னொரு தருணத்தில் ‘குறள் 786’ எடுக்கப்படலாம்”

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனால் சிவகார்த்திகேயனின் முதல்படம் கைவிடப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

Related Posts