காதலி எடுத்த புகைப்படம் – விஷ்ணுவிஷால் செய்த மரியாதை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள ‘காடன்’ வெளியாகவுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜகஜால கில்லாடி’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்து, அப்படத்தைத் தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால். ‘மோகன் தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிக்கிறார். படத்தையும் அவரே தயாரிக்கிறார். இதனை ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.
ஏப்ரல் 11 அன்று இந்தப் படத்தின் அறிவிப்பை ஒரு டீசராகவே வடிவமைத்து வெளியிட்டார். அதற்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.நேற்று, அந்தப் படத்தின் முதல்பார்வையை இணையத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால்.
முதல்பார்வையில் இடம்பெற்றுள்ள புகைப்படம், தனது காதலி ஜூவலா கட்டா கைபேசியில் எடுத்தது என்றும், அதை வைத்தே முதல்பார்வையை வடிவமைத்துவிட்டோம் என்று விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.
ஜுவலாகட்டா இயல்பாக தன் வருங்காலக் கணவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதை ஒரு படத்தின் முதல்பார்வையாகவே வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்திருக்கிறார் விஷ்ணுவிஷால். இதற்கு ஜுவலாகட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.