ஆகாஷ்முரளி அதிதிஷங்கர் படச்செலவு – அதிரவைக்கும் செய்தி
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ.அவருடைய மகள் சினேகாபிரிட்டோ ஒரு திரைப்பட இயக்குநர். அவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது.
ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை.
மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ.
அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில்,
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
பன்முகத் திறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நடிகர் முரளியின் மகனும் அதர்வாமுரளியின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார்.
இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்.
எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன்விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்தப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின் படப்பிடிப்பு தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.அடுத்து போர்ச்சுகல் நாட்டில் இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்னர் சென்னையில் நடந்த படப்பிடிப்புடன் நிறைவு பெற்றதாம்.
இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான வேலைகள் நடக்கிறதாம்.
இதுவல்ல செய்தி.
புதுமுக நடிகர் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் மொத்த செலவுத்தொகை குறித்துச் சொல்லப்படுவதுதான் பெரிய செய்தி.
இந்தப்படத்தைத் தொடங்கியபோதே இதன் மொத்தச் செலவு என்று கணக்கிடப்பட்டது சுமார் பதினேழு கோடி என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்துக்கு அதுவே மிக அதிகம் எனும்போது, அது போதாது என்று சொல்லி இயக்குநர் தரப்பில் கேட்கப்பட்ட தொகை சுமார் இருபத்தைந்து கோடி என்றார்கள்.
இப்போது படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் செலவைக் கணக்கிட்டால் சுமார் முப்பத்தைந்து கோடி ஆகிவிட்டதாம்.
படம் முழுமையாகத் தயாராகி வெளியே வருவதற்குள் மேலும் சில கோடிகள் செலவாகும் என்கிறார்களாம்.
காதல் கணவர் நடிக்கும் படம் என்பதால் தயாரிப்புப் பொறுப்பை மேற்கொண்டிருந்த சினேகாபிரிட்டோ, செலவுக் கணக்கு வழக்கில்லாமல் அதிகரித்ததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.அதேசமயம், இதனால் தந்தைக்கும் கணவருக்கும் இடையே மனச்சங்கடம் வந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில வேலைகளைச் செய்துவருகிறார் என்று சொல்கிறார்கள்.
சில இலட்சங்கள் இல்லாமல் பல படங்கள் தடுமாறும் இதே துறையில் ஒருபடத்தில் இப்படியும் நடக்கிறது என்பது வியப்பான செய்திதானே.











