கன்னடத்தில் மன்னிப்பு கேட்டாரா ரஜினி? – காலா சர்ச்சை
நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக
சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை.
அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. இதற்காகக் காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை.
காலா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்போருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே ஆதரவாக இருப்பது ஏனென்று புரியவில்லை. அவர்களே எதிர்ப்பது சரியாக தெரியவில்லை. திரைப்பட வர்த்தகசபை என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதை உறுதி செய்யும் ஒரு அமைப்பு.
கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று நாங்கள் முயல்வது வீம்புக்காக இல்லை. உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அது ஏன் என்ற கேள்வி எழும். அது கர்நாடகாவிற்கே நல்லா இருக்காது. படத்தை எதிர்ப்பவர்கள் என்னை வந்து சந்திக்கலாம்.
காலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஹைகோர்ட் படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய அரசு உதவ வேண்டும். முதல்வர் குமாரசாமி எந்த நிலையில் இருப்பார் என தெரிகிறது. இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறிவிட்டு கன்னடத்தில் பேட்டியை தொடர்ந்தார்.
கன்னடத்தில் ரஜினிகாந்த் கூறியதாவது…
கன்னட சகோதரர்களே நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. படம் பார்க்க வரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீங்க. படம் ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினி கன்னடத்தில் பேசியதே கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட மாதிரிதான் என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.
காலா படத்தை கர்நாடகாவில் சிக்கலின்றி வெளியிட பல்வேறு தரப்பினர் முயற்சி செய்தனர். அவை எல்லாம் தோல்வியில் முடிந்திருக்கின்றன. எனவே இப்போது ரஜினியே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறார். என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.










