கேஜிஎஃப் 2 பட தமிழக வெளியீட்டு உரிமை – விஷாலை விட்டு எஸ்.ஆர்.பிரபுவிடம் வந்தது எப்படி?
2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் மொழிமாற்று செய்து வெளியிட்டனர்.
கே ஜி எஃப் படத்தைத் தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டார்.
இப்போது, கேஜிஎப் படத்தின் இரண்டம் பாகம் கேஜிஎஃப் சேப்டர் -2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்படம் ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
முதல்பாகத்தை வெளியிட்ட விஷால், அப்போதே சரியான முறையில் கணக்கு வழக்குகளைக் கொடுக்கவில்லையாம். அதனால் இரண்டாம்பாகத்தை எஸ்.ஆர்.பிரபுவிடம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் தமிழக உரிமைக்காக அந்நிறுவனம் கேட்ட தொகை 30 கோடியாம். ஆனால் அவ்வளவு பணம் கொடுத்து வாங்க யாரும் முன் வரவில்லையாம்.
எனவே,விநியோக அடிப்படையில் எஸ்.ஆர்.பிரபுவிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.இதனால் நட்டமாகிவிடுமோ என்கிற பயமில்லாமல் படத்தை வெளியிடவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.











