சினிமா செய்திகள்

மம்முட்டி கேட்ட ஐந்துகோடி – ஆர்யா படக்குழு அலறல்

நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படம் அக்டோபர் 9 ஆம் தேதியன்று பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

முத்தையா இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

வழக்கமாக முத்தையா படங்களில் ராஜ்கிரணுக்கு ஒரு முக்கிய வேடம் இருக்கும். இந்தப்படத்திலும் அவர் நடிக்கிற மாதிரி முக்கிய வேடம் ஒன்று இருக்கிறதாம்.

இம்முறை ராஜ்கிரண் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம் முத்தையா.

அதோடு, அந்த முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்முட்டியைக் கேட்டார்களாம். இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்த நேரத்தில், படத்தின் கதையைக் கேட்ட மம்முட்டிக்குப் படத்தில் நடிக்கச் சம்மதமாம்.ஆனால், சம்பளம் ஐந்துகோடி ரூபாய் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

இதனால் மிரண்டுபோன படக்குழு அவரை வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாம்.

அவருக்குப் பதிலாக நடிகர் பிரபுவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்திவருகிறார்களாம். மம்முட்டி கேட்டதிலிருந்து பத்தில் ஒரு மடங்கு சம்பளத்தில் வேலையை முடித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

Related Posts