செல்வராகவனின் சம்பளம் – அதிகமா? குறைவா?
செல்வராகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி.இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நாயகன் ரவிகிருஷ்ணாவின் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
19 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம்பாகம் தயாராகவுள்ளது.
இரண்டாம் பாகத்திலும் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகன். அவருடைய அப்பா ஏ.எம்.ரத்னம்தான் தயாரிப்பாளர்.முதல்பாகத்துக்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இரண்டாம்பாகத்துக்கும் இசையமைக்கவிருக்கிறார்.
முதல்பாகத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால் இப்போது இரண்டாம்பாகத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
நாயகி தேர்வு உட்பட இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றும் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழில் உருவாகவிருக்கும் இப்படத்தை முதல்பாகத்தைப் போலவே தெலுங்கிலும் வெளியிடத்திட்டமிட்டுள்ளனராம்.
இந்தப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் செல்வராகவனுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
தோல்வியில் இருக்கும் அவருக்கு இது பெரிய சம்பளம் என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும் அவரளவுக்குத் திறமை இல்லாத சில இயக்குநர்கள் இதைவிட மிகமிக அதிகமான சம்பளம் பெறுகிறார்கள் என்பதால் இது அவருக்குக் குறைவு என்று இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.











