வியாபாரத்தில் அசத்தும் பைசன் காளமாடன் – படக்குழு மகிழ்ச்சி
மாரி செல்வராஜ் இயக்கும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடிக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இதனை தயாரிக்கின்றன.
இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதென்றும் இவ்வாண்டு தீபாவளியையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,இப்படத்தின் வியாபாரம் வேகமாக நடந்துவருகிறது.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக அவர் சுமார் பதினைந்து கோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.எம்ஜி எனச் சொல்லப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருக்கிறது.
இவ்வளவு விலைக்கு இந்தப்படம் விற்றிருப்பது திரையுலக வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வியப்பூட்டும் வகையில், இந்தப்படத்தின் மற்ற வியாபாரங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை சுமார் பதினெட்டு கோடி என்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் ஐந்து கோடி என்றும் வெளிநாட்டு விநியோக உரிமை சுமார் இரண்டு கோடி என்றும் சொல்லப்படுகிறது.
இதுவே சுமார் நாற்பது கோடி ஆகிறது.
இவை மட்டுமின்றி.கேரளா,ஆந்திரா,கர்நாடகா மற்றும் வட இந்தியா ஆகிய வெளிமாநில உரிமைகள் மற்றும் சில வியாபாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
மாரிசெல்வராஜ், துருவ்விக்ரம் கூட்டணி காரணமாக இந்த அளவு வியாபாரம் நடந்திருக்கிறது. இது நாயகன் துருவ் விக்ரமின் சந்தை மதிப்பை உயர்த்தும் வகையில் இருக்கிறது என்பதோடு இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் பலன் கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.
இது சம்பந்தப்பட்ட படைப்பாளிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக நடந்திருக்கிறது.இந்தப் படம் வெளியானால் அந்த மகிழ்ச்சி படம் பார்ப்போர் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் படம் நன்றாக வந்திருக்கிறதென்கிறார்கள்.
இதனால் இந்த தீபாவளி,நாயகன் துருவ் விக்ரம் இரசிகர்களுக்கும் திரைப்பட இரசிகர்களுக்கும் ஒருசேர மகிழ்ச்சியைத் தரும் என்பது உறுதி என படக்குழுவினர் மிக நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
நல்லது நடக்கட்டும்.











