சினிமா செய்திகள்

அய்யா படத்துக்கு முன் இன்னொரு படம் – சேரன் அதிரடி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை சேரன் இயக்குகிறார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்தப்படத்தில் மருத்துவர் இராமதாசாக நடிகர் ஆரி நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தயாரிக்கிறார்.

ஜூலை 25 ஆம் தேதி மருத்துவர் இராமதாசின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘அய்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் சுவரொட்டிகளில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்ற வாசகமும் இடம்பெற்றது.மருத்துவர் இராமதாசுவின் பிறப்பு, சிறுவயது வாழ்க்கை, படிப்பு, பட்டம், மருத்துவர் பணி ஆகியனவற்றின் பின்னான பொதுவாழ்க்கை. வன்னியர் சங்கத்தில் தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது வரையிலான அவருடைய வாழ்க்கைதான் படமாகவிருக்கிறதாம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படம் தொடங்குவதற்கு முன் இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் சேரன் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் சேரனே தயாரித்து இயக்கவிருக்கும் அந்தப்படத்தில் யோகிபாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நட்ந்துவருகின்றனவாம்.

அவருடைய தேதிகள், கேட்கும் நாட்களில் கிடைத்தால் பார்ப்பது கிடைக்கவில்லையெனில் தானே நடித்துவிடுவது என்கிற முடிவை இயக்குநர் சேரன் எடுத்திருக்கிறாராம்.

ஏனெனில், செப்டம்பரில் அய்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி முழுமையாக முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு புதியபடத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி செப்டம்பருக்குள் முழுமையாக முடித்துவிடுவார் என்கிறார்கள்.

கடந்தஆண்டு ஜனவரியில் சேரன் இயக்கிய ஜர்னி என்கிற இணையத்தொடர் வெளியானது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் அந்தப்படத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அதற்குள் இன்னொரு படத்தை அவசர அவசரமாக எடுக்க நினைப்பது ஏன்? என்கிற கேள்வி வரலாம்.

ஜர்னி இணையத் தொடர் வெளியானவுடனேயே இப்போது தொடங்கவிருக்கும் புதியபடத்தை எடுக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் சேரன்.அந்த வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் போய் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறதாம்.

அதனால் அய்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.படப்பிடிப்பை முடித்துவிட்டால் அதற்குப் பிறகான பணிகளைப் பொறுமையாகச் செய்துகொள்ளலாம் என்பது அவருடைய திட்டம்.

நன்றாக நடக்கட்டும்.

Related Posts