எல்ஐகே தள்ளிப் போகிறது ஏன்?
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
டியூட் படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார்.தெலுங்குப் பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல் ஐ கே படத்தை,விக்னேஷ்சிவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளது.
அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி செட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.
இப்போது இந்தத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
அதற்குக் காரணம், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என்று சொல்கிறார்கள்.
செப்டம்பர் 18 இல் வெளியிடும் வகையில் படத்தின் பின்னணி இசை அமைத்துத் தரவியலாது என்று அவர் கைவிரித்துவிட்டதால் வேறுவழியின்றி பட வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.
இன்னொரு பக்கம், இப்படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படமான டியூட் படம் அக்டோபரில் வெளியாகவிருக்கிறது.அதனால் செப்டம்பரில் இந்தப்படம் வெளியாக வேண்டாம் என்று அவர் நினைத்தாராம்.ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாவது இரண்டு படங்களுக்குமே நல்லதன்று என்பதால் இந்தப்படத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் என்கிறார்கள்.
அப்படியானால் இரண்டாவதாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற ட்யூட் படத்தைத்தானே தள்ளி வைக்கவேண்டும், இந்தப் படத்தைத் தள்ளிவைக்கச் சொன்னது ஏன் என்று கேட்டால்?
பிரதீப்ரங்கநாதனுக்கு எல் ஐ கே படத்தைவிட ட்யூட் படத்தின் மீதுதான் அதிக நம்பிக்கை என்றும் எனவே அந்தப்படத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இதனால்,பிரதீப் ரங்கநாதன் மேல் கடுங்கோபத்தில் இருக்கிறதாம் எல் ஐ கே படக்குழு.ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாதே?எனவே,படவெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.











