சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகில் மெகா பஞ்சாயத்து – முன்னணி நடிகர்களுக்குச் சிக்கல்?

தமிழ்த் திரையுலகைப் பொறுத்துவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கூட்டமைப்பாகச் செயல்படுவது வழக்கம். திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத சிக்கல்கள் இக்கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்வு காணப்பட்ட நிகழ்வுகள் உண்டு.

தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நடப்பு தயாரிப்பாளர்கள் என்று ஒரு சங்கம் உருவானது, விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என இன்னொன்று உருவானது, திரைப்பட நிதியாளர்கள் எல்லாம் இணைந்து ஃபைனான்சியர் சங்கம் உருவாக்கியது ஆகிய காரணங்களால் இந்த கூட்டமைப்பு என்பதற்கான அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

இதனால் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

இந்தக் காரணங்களால், தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு கூட்டுக் கூட்டம் நடைபெறவிருக்கிறதாம்.

மெகா பஞ்சாயத்து என்று சொல்லப்படும் இந்தக் கூட்டுக் கூட்டத்தில், அண்மையில் பெயர் குறிப்பிடாமல் நான்கு முன்னணி நடிகர்கள் என்று மட்டும் சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்ததல்லவா? அந்த நான்கு நடிகர்கள் பற்றிப் பேசப்படும் என்று சொல்கிறார்கள்.

குறிப்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும் செயலாளருமே ஒரு நடிகர் பற்றிப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.அதுபற்றி விசாரிக்கப்படும் என்கிறார்கள்.

அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவநட்சத்திரம் போன்று நீண்ட காலமாகக் கிடப்பில் இருக்கும் படங்கள் அதில் முதலீடு செய்தவர்கள் நிலை, அவர்களுக்கான தீர்வு ஆகியன குறித்துப் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மெகா பஞ்சாயத்தில் முடிவுகளை எடுத்துவிட்டு அதன்பின், அதில் முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நடிகர் சங்கத்துடன் பேசவிருக்கிறார்களாம்.

அப்போது எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டுவிடும் என்கிறார்கள்.

ஒருவேளை அதிலும் தீர்வு எட்டப்படாமல் போனாலோ அல்லது சுமுகமான முடிவாவது எட்டப்படவில்லையெனில் இந்தக் கூட்டமைப்பே வேலை நிறுத்தம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.

இந்த மெகா பஞ்சாயத்து ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடக்கவிருக்கிறது. இதில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்? என்பது பற்றிய விவரங்கள் அன்றைக்குத்தான் தெரியும்.

Related Posts