லியோவை விடக் குறைவு ஆனாலும் ஏஜிஎஸ் மகிழ்ச்சி – என்ன நடந்தது?

விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.செப்டம்பர் 5,2024 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடைந்துவிட்டதாம்.
விஜய்யின் முந்தைய படமான லியோவை விட முப்பது விழுக்காடு குறைவாகவே இந்தப் படம் விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை சுமார் தொண்ணூறு கோடிக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் எழுபது கோடி என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல்,லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் அறுபது கோடிக்கு விற்பனையானதாகச் சொல்லப்பட்டது.இந்தப்படம் அதைவிடச் சுமார் பதினைந்து கோடி குறைவாக அதாவது சுமார் நாற்பத்தைந்து கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருக்கிறார்.
எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருக்கிறதாம்.அதன்படி இந்த உரிமைக்காக ராகுல் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் தொகை சுமார் எழுபது கோடி என்கிறார்கள். இதற்கான முன் தொகையாக சுமார் பத்துகோடி கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இவற்றிற்கடுத்து, ஆந்திரா உரிமை, கேரளா உரிமை மற்றும் இந்தி உரிமை ஆகியனவற்றின் வியாபாரமும் நடந்து முடிந்துவிட்டது என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக இந்த வியாபாரங்களின் மூலம் கிடைத்த தொகை சுமார் முந்நூற்றைம்பது கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்த வியாபாரம் லியோ படத்தைவிட குறைவுதான் என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் ஹேப்பி அண்ணாச்சி என்கிறார்கள்.
ஏனெனில்,இந்தப்படத்துக்கு ஆன செலவையும் இதன்மூலம் வந்த வரவையும் கணக்கிட்டால், இந்த வியாபாரங்களின்படி வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படத்தின் மூலம் சுமார் நூறு கோடி இலாபம் கிடைத்திருக்கிறதாம்.
படம் நன்றாக ஓடினால் இன்னும் கூடுதலாக இலாபம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது வியாபார வட்டத்தினரின் கருத்து.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. இவ்வாண்டு செப்டெம்பரில் படம் வெளியாகவிருக்கிறது.சுமார் ஒன்றரை ஆண்டுகள் நடந்த ஒரு படத்தால் நூறு கோடி இலாபம் கிடைக்கிறது.
பொதுவாக இம்மாதிரி பெரியநடிகர்களை வைத்து பெரிய செலவுப் படங்களை எடுக்கிறவர்கள் நிலை கரணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான் இருக்கும்.ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இந்தப்படம் அரணம்(பாதுகாப்பு) ஆக அமைந்துவிட்டது.