சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷால் நடிக்கும் புதியபடம் சஞ்சய்வாத்வா தயாரிக்கிறார் – காரணம் என்ன?

கனா,நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களையும் லேபிள் எனும் இணையத் தொடரையும் இயக்கியிருப்பவர் அருண்ராஜா காமராஜ். இவற்றைத் தொடர்ந்து ஒரு புதியபடத்தை அவர் இயக்குகிறார் என்றும் அந்தப் புதியபடத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.அந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

இரண்டாண்டுகள் கடந்துவிட்டன ஆனாலும் அந்தப்படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.ஒருகட்டத்தில் அந்தப்படம் கைவிடப்பட்டது என்று சொல்லப்பட்டது.

அதன்பின்,அந்தப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் அந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்போது அந்தப்படம் குறித்த ஒரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

விஷ்ணுவிஷால் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் இணையும் அந்தப்படத்தை ஏபி இண்டர்நேசனல் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் வாத்வா தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவர், நிறைய படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகிய வியாபாரங்களைச் செய்து கொண்டிருக்கும் அவர், முதன்முறையாக நேரடியாகப் படத்தயாரிப்பில் ஈடுபடவிருக்கிறார் என்றும் அவரே இந்தப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு பவுன்சர் என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்தப் பெயரே,இந்தப் படத்தின் கதை என்ன? என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதால் இந்தப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் பாதுகாவலர் என்பதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் இருக்கின்றன அதனால் இந்தப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

வெற்றிகரமான விநியோகஸ்தராகச் செயல்படும் சஞ்சய் வாத்வா,இப்போது தயாரிப்பில் இறங்கக் காரணம் என்ன?

அவர் விஷ்ணு விஷால் தயாரித்த படங்களுக்கு நிதி மற்றும் விநியோகம் செய்திருக்கிறார் என்றும் அந்த வரவுசெலவுகளில் விஷ்ணு விஷால், சஞ்சய் வாத்வாவுக்கு நிறையப் பணம் தரவேண்டியிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

அந்தப்பணத்தைக் கொடுக்க முடியாத சூழல் காரணமாக,தொடங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தப்படத்தைத் தயாரித்து கணக்கை நேர்செய்து கொள்ளலாம் என்பதற்காகவே அவர் படத்தயாரிப்பில் இறங்குகிறார் என்றும் தகவல் இருக்கிறது.

இதுபோன்ற தகவல்களை எப்போதும் யாரும் வெளிப்படையாக வெளியே சொல்லமாட்டார்கள் என்பது தெரிந்த விசயம்தான்.
அதேசமயம்,இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts