ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு இவ்வளவு விலையா? எப்படி?
ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன். ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘கேப்டன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கேப்டன்’ திரைப்படத்தின் முதல்பார்வையை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இந்தி உரிமையைப் பெரிய விலைக்கு விற்றுள்ளாராம் ஆர்யா. இதுவரை அவருடைய படங்களுக்குக் கிடைக்காத விலை இந்தப்படத்துக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எட்டு கோடிக்குக் கேட்கப்பட்டு கடைசியில் பனிரெண்டு கோடிக்கு வாங்கிக் கொண்டார்களாம்.
இந்தப்படம் மட்டும் இவ்வளவு விலைக்கு விற்றது எப்படி என்றால்? ஆங்கிலப்படங்களைக் காப்பியடித்து தமிழ்ப் படம் எடுப்பார்கள், ஆங்கிலப்படத்தை அப்படியே தமிழில் எடுத்தது போல் கேப்டன் படத்தை எடுத்திருக்கிறார்களாம். அதனால்தான் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.










