சர்ச்சைப் படத்தின் உரிமை – ஜி.வி.பிரகாஷ் முயற்சி
தெலுங்கில், ரவிகாந்த் இயக்கத்தில் இணைய தளத்தில் வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இதில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் என்பதைக் கதைக்கருவாகக் கொண்ட இந்தப்படத்துக்கு வரவேற்பும் அதே அளவு விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.
இப்படத்தில் இந்துக் கடவுளான கிருஷ்ணரையும், ராதாவையும் தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பலரும் சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப்படத்தின் தமிழாக்க உரிமையைப் பெற ஜீ.வி.பிரகாஷ் முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. உரிமையைப் பெற்று அவரே நாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.