ஷாருக்கான் ட்வீட்டால் பிகில் படத்துக்கு நேர்ந்த துயரம்
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (அக்டோபர் 12) வெளியானது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
2 நிமிடம் 41 விநாடிகள் நீளம் கொண்ட இந்த முன்னோட்டத்தில் நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும்,நயன்தாரா வரும் காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வெளியானதிலிருந்து ஏராளமானோர் பார்த்து வருவதாலும் பலரும் அதை விரும்புவதாலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருவதாகப் படக்குழுவினர் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் பிகில் முன்னோட்டத்தை பார்த்த இந்தி நடிகர் ஷாருக்கான், “எனது நண்பர்கள் அட்லி, விஜய், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஷக் தே இந்தியா படம் போல் உத்வேகத்தை அளித்துள்ளது“
என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘ஷக் தே இந்தியா’ படத்தில் ஷாருக்கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நடித்திருப்பார்.
பிகில் படத்தில் விஜய், மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஷாருக்கான் பிகில் படத்தை புகழ்வது போல கேலி செய்திருக்கிறார் என்கிற கருத்து வேகமாகப் பரவிவருகிறது.
இதன்விளைவாக ஷக் தே இந்தியா என்கிற குறிச்சொல் இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்திருக்கிறது.
பிகில் படக்குழு எப்படிப்பட்ட துயரங்களையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது?











