லோகேஷ் கனகராஜுக்குக் கொடுத்த காசோலையைத் திரும்ப வாங்கிய கமல்
நடிகர் ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம்.
இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
அதன்படி, ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். அந்தக்கதையில் ரஜினிக்கு முழுத் திருப்தி இல்லை. வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற கதையாக அது இல்லை என்று சொல்லப்பட்டது.
அதன்பின் ரஜினியின் விருப்பங்களை, சவுந்தர்யா ரஜினி மூலம் அறிந்து கொண்ட லோகேஷ்கனகராஜ், கதையில் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.காணொலி அழைப்பில் திரைக்கதையை ரஜினியிடம் கூறினாராம் லோகேஷ் கனகராஜ்.
இம்முறை ரஜினிக்கு அதில் திருப்தியேற்பட்டதாம். அதன்பின் கமலுடனும் பேசினாராம். அதன்விளைவு ரஜினியின் 169 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டதாம்.
இதன்காரணமாக, லோகேஷ் கனகராஜுக்கு ஏற்கெனவே சொன்னதை விட ஒரு கோடி அதிகச் சம்பளம் கொடுக்க கமல் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.அதனால் முதலில் கொடுத்த காசோலையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு புதிய காசோலைகள் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
இதனால் லோகேஷ் கனகராஜ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.











