சினிமா செய்திகள்

ஆர்.கே.செல்வமணியைத் தனியாகக் கவனித்த ஐசரிகணேஷ்? – சிம்பு படப்பிடிப்புக்குத் தடை நீக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 6,2021 ஆம் தேதி) தொடங்குகிறது.

முதலில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் தடை இருந்தது,

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்கவேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமுடிவு காணும்வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டாம் என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அதோடு, சிம்பு படக்குழுவினரைத் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கும்வரை உங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி ஆகஸ்ட் 2,2021) காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது.

அப்பேச்சுவார்த்தையில்,தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் சிம்பு சார்பாக அவருடைய அம்மா உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அப்போது,பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் சிக்கல்கள் குறித்து உஷாராஜேந்தரிடம் எடுத்துச் சொல்லப்பட்டதாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட உஷாராஜேந்தர், வீட்டுக்குப் போய் சிம்புவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும்வரை சிம்பு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம்.

பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு சிம்பு தரப்பிலிருந்து முறையான பதில் இல்லையென்றபோதும், சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துவிட்டதாம்.

தகவல் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்,தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணியைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, அவர்கள் படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள், எனவே நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆர்.கே.செல்வமணியின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம், சிம்பு படத்தின் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் என்பதுதானாம். ஐசரிகணேஷ் தனிப்பட்ட முறையில் ஆர்.கே.செல்வமணிக்குச் சில சலுகைகள் வழங்கியதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது என தயாரிப்பாளர்கள் மத்தியில் பேச்சு.

என்னென்னமோ நடக்குது.

Related Posts