சிம்புவின் 47 ஆவது படம் பெயர் மாறியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர், பிப்ரவரி 25,2021 அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டது.அப்போது படத்தின் பெயர் நதிகளிலே நீராடும் சூரியன். இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றவிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.
இன்று (ஆகஸ்ட் 6,2021) திருச்செந்தூரில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய முதல்பார்வை வடிவமைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தப் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளனர்.
திருச்செந்தூரில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.