விமர்சனம்

ஜெகமே தந்திரம் – விமர்சனம்

மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் நாயகன் இலண்டன் சென்று செய்யும் அலப்பறைகளே ஜெகமே தந்திரம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாகப் படம் வெளியாகியிருக்கிறது.

திரையரங்கில் வெளியாகியிருந்தால் டிக்கெட் விலைக்கு ஒர்த்தா? என்று கேட்கலாம். சரி, நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஸனுக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா ஜெகமே தந்திரம்?

இலண்டனில் இரண்டு கேங்ஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு கேங்ஸ்டருக்கான வேலை செய்ய மதுரையிலிருந்து செல்கிறார் நாயகன் சுருளி.

இரண்டு கேங்ஸ்டர்களும் யார்? எதற்காக இருவருக்குள்ளும் பிரச்னை? யாருக்காக யாரை தீர்த்துக் கட்டுகிறார் தனுஷ்? (சுருளி), கதைக்குள் தமிழீழம், அகதிகள் பிரச்னை எப்படி வந்தது? என்பதே மீதித் திரைக்கதை.

மதுரையில் புரோட்டா கடை நடத்திவரும் சுருளி, இலண்டனில் ‘லிட்டில் மதுரை’ என புரோட்டா கடை துவங்குவது, ரஜினி மேனரிஸம், கெட்டப் சேஞ்ச் ஓவர் என வந்துபோகிறார் தனுஷ்.

படத்தில் மூன்று கேரக்டர்களே பிரதானம். சுருளியாக லோக்கல் தாதா தனுஷ், இனவெறி பிடித்த வெள்ளையனாக ஜேம்ஸ் காஸ்மோ, ‘நாயகன்’ ஸ்டைல் டானாக ஈழத் தமிழராக ஜோஜூ ஜார்ஜ்.

இந்த மூன்று கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்த விதம், கேங்ஸ்டர்களுக்கு இடையிலான மீட்டிங் சீன் வரை படம் விறுவிறுவென நகர்கிறது. அதன்பிறகான கதை பலவீனமாகிறது.

பலவீனமான கதை, நீளமாக திரைக்கதை (2.40 மணிநேரம்) படத்துக்கு மைனஸ்.

புஜ்ஜி, நேத்து பாடல்கள் படத்தில் இடம்பெறாதது கொஞ்சம் ஆறுதல். சந்தோஷ் நாராயணனின் இசையும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ்.

கேங்ஸ்டர் கதையென்பதால் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். தனுஷூக்கு காட்சிக்குக் காட்சி கொடுக்கப்படும் பின்னணி இசை, படத்தின் பலவீனத்தை மறைக்கிறது.

அதோடு, இலண்டனை படமாக்கிய விதம், பனிபொழிவின் போது க்ளைமேக்ஸ் காட்சியெல்லாம் ரசனையோடு தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படம் துவங்கிய ஒரு மணிநேரத்துக்குள் அடுத்தென்ன நடக்கப் போகிறது என்பதில் தொடங்கி கிளைமேக்ஸ் வரையிலும் ஆடியன்ஸால் யூகித்துவிட முடியும். மூன்று பெரும் நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் என்பதால் கதையில் கவனம் செலுத்த தவறிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.

ஜோஜூ ஜார்ஜ் யார்?, எப்படியெல்லாம் மாஃபியா வேலைகள் செய்கிறார்? என்பதை எளிதில் கண்டுபிடிக்கிறார் ஆங்கிலம் பேசவே தடுமாறும் சுருளி. ஆனால், ஜோஜூ ஜார்ஜ் நல்லவரா கெட்டவரா, இரண்டு கேங்ஸ்டர்களுக்கும் இடையே என்ன பிரச்னை நடக்கிறது என்பது மட்டும் தனுஷூக்கு தெரியவில்லை என்பதிலெல்லாம் லாஜிக்கே இல்லை.

ஈழத்தில் நடந்த போர் காரணமாக, அகதிகளாகும் மக்கள், நாடுநாடாகத் திரியும் அவல நிலைகளை படத்தின் கருவாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலத்தான் இருக்கிறது. கமர்ஷியல் கேங்க்ஸ்டர் கதைக்குள் தமிழீழப் பிரச்னையை பேசியது உணர்வுப்பூர்வமாக இல்லை.

ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளில் கேங்க்ஸ்டராக இருக்கிறார்கள் என்பது போல நெகட்டிவாக படம் முழுக்க காட்சிப்படுத்தியிருப்பதும், அதற்கு ஒரே சீனில் நியாப்படுத்துவதெல்லாம் நியாயமே இல்லை. இத்தனைக்கும் திரைக்கதை உதவி என சோமீதரன் என்கிற ஈழத்தமிழர் பெயர்தான் இருக்கிறது.துரோகம் நம் இனத்தின் சாபம்.

அதோடு, அகதிகளாக நாடுநாடாகத் திரியும் மக்களுக்கு வெளிநாடுகளின் கதவுகள் இனவெறிப்பிடித்த அரசியல் மாஃபியாக்களால் சாத்தப்படுகிறது எனும் உணர்வுப்பூர்வமான பிரச்னையை கையில் எடுத்து அதை தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

எதற்கெடுத்தாலும் விவசாயிகள் பிரச்னையை படத்தில் வைத்துவிடுவது போல, தமிழீழப் பிரச்னையை படத்தில் கொண்டுவருவதை டிரெண்ட் செய்துவிடாதீர்கள் ப்ளீஸ் என்றே சொல்லத் தோன்றுகிறது.

வடிவுக்கரசி, செளந்தரராஜா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் மற்றும் கலையரசன் என பல நடிகர்கள் இருந்தாலும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. நாயகனைத் திருத்தி நல்வழிப்படுத்த நாயகி செய்யும் வழக்கமான ரோலில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அதோடு, பெரிதாக கிளை நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை.

தமிழனுக்குத் தமிழன் தான் துரோகம் செய்கிறான் எனவும், அதே தமிழன் தான் தமிழர்களைக் காப்பாற்றுகிறான் என்றும் சொல்லி, என்னமாதிரியான அரசியல் பேசவருகிறார் என்பதும் புரியவில்லை. புரிந்துகொள்ள ரசிகர்களும் விரும்பாமல் இருப்பதே நன்று!

மொத்தத்தில், நார்மலான கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம். கதை மற்றும் திரைக்கதை சொதப்பல்களால் முற்றிலும் கோணலாகிவிட்டது.

– முத்து

Related Posts