விமர்சனம்

கெழப்பய – திரைப்பட விமர்சனம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய.

கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட வைக்கிறார்.

உடல் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில் முழுமையாகப் பொருந்தி வரவேற்புப் பெறுகிறார்.

கிருஷ்ணகுமார், விஜயரணதீரன்,கே.என்.ராஜேஷ்,பேக்கரி முருகன், உறியடி ஆனந்தராஜ், அனுதியா ஆகியோர் அவரவர் வேலையைச் சரியாகச் செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளருக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய கதை மற்றும் மிகக் குறுகிய படப்பிடிப்பு இடம் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் அஜித்குமார்.

பல இடங்களில் அமைதியாக இருப்பதன் மூலம், யார் இசையமைப்பாளர்? எனக்கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கெபி.

படத்தொகுப்பாளர் கே.என்.ராஜேஷ் ஈடுபாட்டுடன் பணியாற்றிப் பலம் சேர்த்திருக்கிறார்.

ஒரு மெல்லிய கதை, புதுமுக நடிகர்கள்,கட்டுப்பாடான படப்பிடிப்பு ஆகியவற்றை வைத்தே, அதிலும் எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய விசயத்தையே திரைக்கதையாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் யாழ் குணசேகரன்.

கெழப்பய என்று எள்ளி நகையாடி எவரையும் எளிதில் புறக்கணித்துவிட இயலாது என்கிற ஆழமான செய்தியையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

– குமரன்

Related Posts