வேட்டையன் – திரைப்பட விமர்சனம்
ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்? இறுதியில் என்ன நடந்தது? என்கிற வினாக்களுக்கான விடையாக வந்திருக்கிறது வேட்டையன்.
காவல்துறை அதிகாரி வேடத்தால் ரஜினிகாந்த்துக்குப் பெருமையா? ரஜினிகாந்த்தால் அந்த வேடத்துக்குப் பெருமையா? எனப் பட்டிமன்றமே நடத்தலாம்.சில இடங்களில் தெரியும் உடல்தளர்ச்சியையும் மீறி அவரை இரசிக்க வைக்கிறது அவருடைய நிஜ பிம்பமும் கதாபாத்திரமும். என்கவுண்டடர்தான் சரி என்று முழுமையாக நம்பியவர், தவறாக ஒரு என்கவுண்ட்டர் நடந்ததை அறிந்து துடிக்கும் காட்சிகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார் ரஜினிகாந்த்.
மனித உரிமை பேசும் அமிதாப்பச்சன், அந்த வேடத்துக்கு அட்சர சுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.அகில இந்தியாவும் அறியும் உச்சநடிகர் பேசும் வசனங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை.அனைவரும், குறிப்பாக அதிகாரத் திமிரில் ஆட்டம் போடுகிறவர்கள் உணரவேண்டியவை.
ரஜினியின் மனைவியாக வரும் மஞ்சுவாரியர்,பாட்டு நடனம் மற்றும் சில அதிரடி ஆகியனவற்றைச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் அருமை.அவர் வேடம் கதையின் மையம். அவர் நடிப்பு படத்தின் பலம்.
பகத்பாசிலின் கதாபாத்திரம் மாறுபட்டது.அதில் மிக நன்றாக நடித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
ராணா டகுபதியின் வேடம், நாட்டில் நிகழும் தற்கால அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வேடம்.ஓங்குதாங்கான அவர் அதில் நடித்திருப்பது பொருத்தம்.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரக்சன், மற்ற வேடங்களில் நடித்திருக்கும், கிஷோர், ரித்திகா சிங்,ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ரமேஷ் திலக்,ராவ் ரமேஷ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கின்றனர்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் கண்கவர் மற்றும் மனங்கவர் காட்சிகள் நிறைந்திருக்கின்றன.
அனிருத் இசையில் பாடல்கள் நிறைவு.பின்னணி இசை குறைவு.
படத்தொகுப்பு செய்திருக்கும் பிலோமின் ராஜ், இரண்டாம் பாதியில் இன்னும் குறைத்திருக்க வேண்டும்.
த.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கிறார்.
நல்ல கதையை எழுதிவிட்டு அதற்கான திரைக்கதை அமைப்பதில் சறுக்கியிருக்கிறார்.யூகிக்கக் கூடிய முடிவை வைத்துக்கொண்டு இப்படிக் கொண்டு போயிருப்பது பலவீனம்.
போதைப்பொருள் புழக்கம், நீட் உள்ளிட்ட பயிற்சி மையக் கொள்ளைகள் உட்பட பல ஆழமான விசயங்களைத் தொட்டு அவற்றின் ஆபத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரஜினிகாந்த, அமிதாப்பச்சன் ஆகிய உச்ச நடிகர்களை வைத்து பல உயரிய கருத்துகளைப் பேச வைத்து அவர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தந்திருக்கிறார்.
இந்த வேட்டையனின் குறி தப்பவில்லை.மனசு விழுந்துவிட்டது.
– ஆதிரை