விமர்சனம்

குடிமகான் – திரைப்பட விமர்சனம்

கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விநோதமான நோயை உருவாக்கி அதைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து இரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும் படம் குடிமகான். குடிமகன் என்பதைத் தவறாக எழுதிவிடவில்லை. படத்தின் பெயரே அதுதான்.

நாயகன் விஜய்சிவன் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். அவருக்கு ஜங்க்ஃபுட் எனப்படும் நொறுக்குத்தீனிகள் சாப்பிட்டாலே மதுஅருந்தியது போன்று போதையாகிவிடுவார். குடிக்காமலே குடிகாரன் என்று பெயர் வாங்கும் அவர் அதனால் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

விஜய்சிவனும் அதற்கேற்ப நடித்திருக்கிறார். சாதாரணமாக இருக்கும் போதும் போதை ஏறியவுடன் ஆடும்போதும் நிஜ குடிகாரர் போலவே இருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.

கண்ணழகி சாந்தினிக்கு பொறுப்பான குடும்பத்தலைவி வேடம். அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி, குடிகாரர்கள் சங்கத்தலைவராக வரும் நமோநாராயணன் மற்றும் குழுவினர் ஆகியோர் மேலும் சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் மெய்யேந்திரன், இசையமைத்திருக்கும் தனுஜ்மேனன் ஆகியோர் திரைக்கதையின் தன்மைக்கேற்ப உழைத்திருக்கிறார்கள்.

ஷிபு நீல்.பி.ஆர் படத்தொகுப்பில் இரண்டாம்பாதி போல் முதல்பாதியும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எழுதி இயக்கியிருக்கும் பிரகாஷ்.என், கதாநாயகனுக்குப் புதிய நோயைக் கண்டுபிடித்து அதை அவர் நினைத்த மாதிரியே மக்களுக்கும் கடத்தியிருக்கிறார்.அதோடு தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளையும் சுட்டியிருப்பது நன்று.

– குமார்

Related Posts