விமர்சனம்

மாளிகப்புரம் – திரைப்பட விமர்சனம்

மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல்.

சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார்.

அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் மாளிகப்புரம்.

கதையின் நாயகியான சிறுமி தேவநந்தா அந்த வேடத்துக்கு முழுநியாயம் செய்துள்ளார்.வெள்ளந்திச் சிரிப்புடன் இருக்கும் அவருக்கு ஏற்படும் அளவுக்கு மீறிய சோகத்தையும் முகத்தில் காட்டிக் கலங்க வைக்கிறார்.

அவருடன் வரும் சிறுவன் ஸ்ரீபத் துறுதுறுப்புடன் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகன் உன்னி முகுந்தன் கறுப்பு உடை,திடகாத்திர தேகம், அழகான சிரிப்புடன் வலம் வருகிறார். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டும் வேகம் வியப்புக்குரியது. தொடக்கத்தில் ஒரு சாதாரண பக்தர் போல் வந்து சாகசம் செய்கிறார். இறுதியில் அவர் யார்? எனத் தெரியும்போது எல்லாம் பொருத்தமாக அமைந்துவிடுகிறது.

நடிகர் சம்பத்ராம் வில்லனாக வருகிறார். அதற்கேற்ற தோற்றத்துடன் வரும் அவர் கண்களாலேயே மிரட்டியிருக்கிறார்.

சிறுமியின் தந்தையாக நடித்திருக்கும் சைஜுகுரூப் சிரிக்கவைத்து பின்பு சோகத்தையும் கொடுக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன், கொஞ்சநேரமே வந்தாலும் சிறப்பு.

ரஞ்சன் ராஜாவின் இசை படத்தின் தன்மையை உணர்ந்திருக்கிறது.

விஷ்ணு நாராயணனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு.

தமிழில் வசனங்களை எழுதியிருக்கும் வி.பிரபாகர், மலையாளத்தில் நடந்த தவறை மறைத்திருக்கிறார்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தை மையமாகக் கொண்டு ஒரு பக்தி படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்ற சொல்லுக்கேற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார்.

சைஜுகுருப்பீன் வேடத்தை வைத்து பக்தி மட்டும் காப்பாற்றாது உழைப்புதான் காப்பாற்றும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

Related Posts