பிகினிங் – திரைப்பட விமர்சனம்

இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா
1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங்.
முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன.
வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின் கதாபாத்திர வடிவமைப்பு இதற்கு நியாயம் செய்கிறது.
படம் தொடங்கி கொஞ்ச நேரத்துக்கு வினோத்கிஷனின் மூளைவளர்ச்சியற்ற கதாபாத்திரமும் அவர் பேசும் பேச்சுகளும் தொந்தரவாக இருக்கின்றன. போகப்போக அந்தக்கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது. மனிதத்தின் உச்சம் என்று சொல்லுமளவுக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக்கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார் வினோத்கிஷன்.
நாயகியாக நடித்திருக்கும் கெளரிகிஷனுக்குப் பரிதாபமான வேடம். யாருக்கும் நடக்கக்கூடாத கொடூரம் நடந்துமுடிந்த பின்பு நம்பியிருந்த காதலன் மனம்மாறிவிட்டான் என்பதை உணர்ந்து பார்க்கும் பார்வையில் கலங்க வைத்துவிடுகிறார் கெளரிகிஷன்.
சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் சச்சின், அவரை நம்பி ஏமாறும் மகேந்திரன், சுருளி,லகுபரன் மற்றும் ஒரு சில காட்சிகளில் வருகிற ரோகிணி, பாலா ஆகிய அனைவரும் மிகப்பொருத்தம்.
மிகக்குறுகிய வாய்ப்பு என்றாலும் காட்சிகளைக் கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரக்குமார்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது.
சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு படத்தை இயல்பாகக் கொண்டு செல்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெகன்விஜயா, உடலை மையப்படுத்தி இயங்கும் மனிதர்களை உள்ளத்தில் தூய்மை வைத்திருக்கும் மனதை வைத்துக் குற்றவாளியாக்குகிறார்.
நல்ல தொடக்கம்.